விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

சாலமோன் கின்ஸ்பர்க் (1867-1927)

சாலமோன் கின்ஸ்பர்க் (Solomon Ginsburg) 1867-1927
யூதர்களின் அறிவு நிலைய சங்கமாக திகழ்ந்த போலந்து தேசத்தில், சுவால்க்கி என்னும் ஊரில், 1867ம் வருடம் ஆகஸ்ட் 6ம் தேதி யூத ரபிக்கும், பக்தி மிகுந்த யூத பெண்ணிற்கும் மகனாய் பிறந்தார் சாலமோன் கின்ஸ்பர்க். 18 ம் நூற்றாண்டில் போலந்து தேசம் ரஷ்ய அரசின் ஆளுகையில் இருந்தமையால் படிப்பிற்கான வசதிகள் குறைவாக காணப்பட்டது. சாலமோன் 6 வயதாக இருக்கும் போதே அவரது தாயாருக்கு அவரை ஜெர்மனியில் படிக்க வைக்கவேண்டுமென ஆவல் கொண்டார். ஆனால் யூத ரபியான அவரது தகப்பனோ யூத மத கலாச்சாரத்தில் அவரை வளர்த்து அவரையும் யூத ரபியாக உருவாக்க ஆவல் கொண்டார். தாயாரின் வற்ப்புறுத்துதலால் ஜெர்மனி சென்று, பல கப்பல்களுக்கு அதிபதியான தனது தாத்தா வீட்டில் 14 வயது வரை தங்கி படித்து பின்பு போலந்து சென்றார் சாலமோன்.

ஏசாயா 53 ல் சொல்லப்பட்டுள்ள “அவர்” யார்?
அது கூடாரப்பண்டிகை தினம். யூத ரபிகள் சாலொமோனின் வீட்டில் கூடினார்கள். வேதாகம சம்பவங்களின் அடிப்படையில் ஆராய தொடங்கினார்கள்.  ஏசாயா 53 ம் அதிகாரத்திற்கு நேராய் விவாதம் சென்றது. அறைக்கு வெளியிலிருந்து கேட்டுகொண்டிருந்த சாலொமோன் கின்ஸ்பர்க் அறைக்குள்ளே நுழைந்தார். ஏசாயா 53 ம் அதிகாரத்தில் பெருபாலும் வந்துள்ள “அவர்”, “அவரை”, “அவருக்கு”, “அவர்மேல்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த “அவர்” யார்? என்று தகப்பனிடம் கேட்டார். சினமடைந்த தகப்பன் கன்னத்தில் ஒரு அறையை பதிலாய் அளித்தார். இவனை இப்படியே விடக்கூடாது என்று சொல்லி, யூதரகளுக்கான பயிற்சி பள்ளியில் சாலொமோனை சேர்த்தார்.

லண்டனில் இயேசுவை எற்றுகொள்ளுதல்
இந்த சூழ்நிலையில் பெற்றோருக்கு தெரியாமல் லண்டன் சென்று தூரத்து உறவினர் வீட்டில் தங்கி வேலை தேடும் முயற்சியில் இறங்கினார் சாலொமோன். ஒருநாள் வீட்ற்க்கு திரும்புகையில் யூத கிறிஸ்தவர் ஒருவரை வழியில் சந்தித்தார். அவர் அன்று மாலை தன்னுடைய வீட்டில் ஏசாயா 53 அதிகாரத்தை மைய்யமாக கொண்ட வேதபாட வகுப்பு நடக்க இருப்பதாய் தெரிவித்தார். ஏசாயா 53 ம் அதிகாரத்தில் பெருபாலும் வந்துள்ள அந்த “அவர்” யார்? என்ற கேள்விக்கு பதிலறியும் ஆரவ்த்தில் அந்த வகுப்பிற்கு சென்றார். அந்த “அவர்” இயேசு கிறிஸ்துவே என்றும் அவரே மேசியா என்றும் அவருக்கு தெளிவான பதில் கிடைத்தது. அப்பொழுதே இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு அதை வெளிப்படையாக அறிக்கையும் செய்தார். சாலொமோனுடைய உறவினர்கள் இந்த செய்தியை அவருடைய பெற்றோருக்கு தெரிவித்தார்கள்.

சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கினார்
சாலொமோனுடைய பெற்றோர் அவருக்கு மிகவும் பிரியமான மாமா ஒருவரை இயேசு கிறிஸ்துவின் மீது சாலொமோன் கொண்டுள்ள விசுவாசத்தை கைவிட்டு தன்னோடு அழைத்து வரும்படி லண்டனுக்கு அனுப்பியிருந்தனர். சாலொமோனோ தன்னுடைய கிறிஸ்துவ விசுவாசத்தை கைவிட மறுத்துவிட்டார். இறுதியில் அந்த மாமாவும் அவரோடு வந்திருந்த யூத ரபிகளும் சாலொமோனை சுற்றி நின்று உபாகமம் 28 ம் அதிகாரத்தில் 16 ம் வசனம் முதல் 68 ம் வசனம் வரை சொல்லப்பட்டுள்ள சாபங்களை ஒருமித்து பாட்டாக பாடி பல முறை அவரை சபித்தனர். இதை கேட்க கேக்க சாலொமோனுடைய உள்ளத்தில் பயம் ஆட்கொண்டது. இந்த நிலையில் திடீரென்று சிலுவையில் அறையுண்ட இயேசுவை தரிசனத்தில் கண்டார். அந்த சிலுவைக்கு மேல் பளிச்சென்று மின்னுகிற ஒரு வசனத்தை கண்டார். “கிறிஸ்து நமக்காக சாபமாகி நியாப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக் கொண்டார்” கலா 3:13  என்ற வசனம் தான் அது. உள்ளத்தில் இருந்த பயம் நீங்கி மகிழ்ச்சி பொங்கியது. குடும்ப உறவு முறிபட கிறிஸ்துவே அவருக்கு தகப்பனாய் மாறினார். யூதர்கள் இரண்டு முறை அவரை கொள்ள முயன்று தாக்கினர். மரணம் ஏற்படாமல் கர்த்தர் காப்பாற்றினார். பின்னர் லண்டனிலுள்ள பிரிசிபிட்டேரியன் மிஷன் (PRESBYTERIAN MISSION) ஆலயத்தில் ஞானஸ்நானம் பெற்றார்.

பிரேசிலுக்கு மிஷனரியாய் சென்ற சாலமோன் கின்ஸ்பர்க்
ஒரு நாள் இந்தியாவில் இருந்து வந்திருந்த மிஷனரியை சந்தித்து பேசிகொண்டிருக்கையில் மிஷனரி தாகம் சாலொமோனுக்கும் ஏற்ப்பட்டது. பிரேசில் நாடு கத்தோலிக்கர்கள் மிகுந்த நாடு. அந்த நாட்டிற்க்கு சத்தியத்தை அறிவிக்க தன்னை அர்ப்பணித்தார். அங்கு சென்ற சிறிது நாட்களிலேயே பிரேசில் மொழியை நன்கு கற்றுக்கொண்டார். பின்னர் கத்தோலிக்கர்களின் சிலை வணக்கத்தைக் கண்டித்து பேச ஆரம்பித்தார். “தூய பேதுரு போப் அல்ல” என்றும் “கந்தையும் எலும்புமான மதம்” என்ற தலைப்பில் கத்தோலிக்க சபைக்கு எதிராக கைப்பிரதிகள் அச்சிட்டு விநியோகம் செய்தார். கத்தோலிக்க பாதிரியார்கள் அவர் மீது சினம் அடைந்து அவரைக் கொலை செய்ய முயன்றனர். எல்லா வித தீமையினின்றும் இயேசு அவரைக் காத்துக் கொண்டார். எதிர்ப்புகள் சோதனைகள் மத்தியில் சத்தியமாகிய இயேசுவை தைரியமாய் கூறி அநேக மிஷன் மைய்யங்களை உருவாக்கினார்.

தெளிப்பு ஞானஸ்நானமும் முழுக்கு ஞானஸ்நானமும்
இங்கிலாந்தின் சபை (Church of England) வழக்கத்தின்படி மக்களுக்கு தெளிப்பு ஞானஸ்நானம் (Sparkling Babtism) கொடுத்து வந்தார் சாலமோன் கின்ஸ்பர்க். இந்த நிலையில் பேப்டிஸ்ட் மிஷனரிகள் அவரை சந்தித்து, தெளிப்பு ஞானஸ்நானம் கொடுப்பது சரியானதல்ல என்பதையும், முழுக்கு ஞானஸ்நானமே (Immersion Babtism) சரியானது என்றும் வேத ஆதாரத்தோடு விளக்கினார்கள். தெளிப்பு ஞானஸ்நானமே சரி என்று நம்பியிருந்த சாலொமோனுடைய கண்களை கர்த்தர் திறந்தார். தான் தெளிப்பு ஞானஸ்நானம் கொடுத்த மக்கள் அனைவருக்கும் முழுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். இதை அறிந்த இங்கிலாந்து சபை சாலமோன் கின்ஸ்பர்க்கை கடுமையாக கண்டித்தது. இங்கிலாந்து சபையிலிருந்து வந்த கடிதத்திற்கு பின்வருமாறு பதில் எழுதினார், “ஞானஸ்நானத்தை குறித்து வேதத்தின் அடிப்படையில் அறிந்து கொள்ளும் நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்தது. வேதத்தின் பழைய ஏற்ப்பாட்டில் எலிசா தீர்க்கதரிசி குஷ்டரோகியாகிய நாகமானை யோர்தான் நதியில் “ஏழுதரம் ஸ்நானம் பண்ணு” (2 இரா 5:1௦) என்று சொன்னதை வாசிகின்றோம். தேவனுடைய மனுஷன் சொன்னபடி யோர்தானில் எழுதரம் முழுகின பொழுது அவன் சுத்தமானான் (வ.14) என்று வாசிகின்றோம். இதைப் பற்றி எபிரேய கிரேக்க மொழி வல்லுநர் டாக்டர். டேவிட் சி. கின்ஸ்பர்க் (Doctor. David C. Ginsburg) இவ்வாறு கூறியுள்ளார். பழைய ஏற்ப்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள மூழ்கி ஞானஸ்நானம் செய்தல் என்ற அதே எபிரேய வார்த்தை தான் புதிய ஏற்பாடில் கிரேக்க மொழியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றார். ஆகவே இதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது” என்று கூறினார். இந்த நிலையில் இங்கிலாந்து சபை அவருக்கு அளித்து வந்த உதவியையும் தொடர்பையும் துண்டித்தது. லண்டனில் அவருக்கு நியமிக்கப்பட்டிருந்த பெண்ணும், திருமண நியமத்தை முறிக்க போவதாக கடிதம் எழுதினால். எனினும் தனது கோட்பாடிலிருந்து சற்றேனும் விலகவில்லை சாலமோன் கின்ஸ்பர்க். “வேதத்தை ஆராய்ந்து படி. முழுக்கு ஞானஸ்நானமே வேடம் அங்கிகரிக்கும் முறை என்பதை உன்னால் விளங்கி கொள்ள முடியாவிட்டால், நமது திருமண நியமத்தை முறித்து கொள்ளலாம்” என்று எந்த தயக்கமுமின்றி பதில் எழுதினார்.

பிரேசில் நாட்டில் மிஷனரிப் பணி
பிரேசில் நாட்டின் கிராமங்கள் தோறும் சுற்றித் திரிந்து இயேசு கிறிஸ்துவே ஆண்டவர் என்று போதித்து அநேக மக்களை இயேசுவண்டை நடத்தினார் சாலமோன் கின்ஸ்பர்க். சிறைச் சாலைகளுக்கு சென்று கைதிகளுக்கு வேதத்தை போதித்து அநேகரை மனம் திரும்ப செய்தார். இயேசு கிறிஸ்துவின் அன்பை முதன்மைப்படுத்தி பேசி அநேகரை இரட்சிப்பிற்க்குள் வழிநடத்தினார். தனிமனிதனாக உள்ளூர் கிராம மக்களின் துணையோடு அநேக சபைகளை நிறுவினார். 35 வருட்ங்கள் இவர்  செய்த மிஷனரி பணியினால் பாவத்திலும் விக்கிரக ஆராதனையிலும் சிக்குண்டிருந்த அநேக மக்கள் இயேசு கிறிஸ்துவின் அன்பை அறிந்துகொண்டு தங்கள் பாவங்களிலிருந்து விடுதலை பெற்றனர். 1927ம் வருடம் ஏப்ரல் 1ம் தேதி தான் மிஷனரி பணி செய்த பிரேசில் நாட்டிலேயே கோதுமை மணியாய் வீழ்ந்தார்.

நன்றி
Word of Christ

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " சாலமோன் கின்ஸ்பர்க் (1867-1927) "

Post a Comment