விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

மோசேவின் வாழ்க்கையில் ஆறு பெண்கள்


இன்றைக்கு பெண்கள் அதிகமாய் வெளியிடங்களுக்கு சென்று ஊழியம் செய்ய முடியாத நிலை உள்ளது. சங்கீதம் 68:12 வசனத்தில் பார்கின்றோம் “வீட்டிலிருந்த ஸ்திரீயானவள் கொள்ளைப் பொருளைப் பங்கிட்டாள்”. கர்த்தருடைய ஊழியத்தில் சகோதரிகளுக்கும் சமபங்கு உண்டு என்பதை இந்த வசனம் நமக்கு காண்பிக்கின்றது. தங்கள் குடும்பத்தை ஆவிக்குரிய வழியில் நடத்தவும், குழந்தைகளை கர்த்தருக்குள் நடத்தும் படியான மாபெரும் ஊழியம் பெண்களுக்கு அருளப்பட்டுள்ளது. இன்றைக்கு நான் நற்செய்தியை அநேக பகுதிகளில் அறிவித்து, அநேகரை பரலோக ராஜ்யத்திற்கு நேராக நடத்தி பரலோகத்தில் பொக்கிஷத்தை சேர்க்கின்றேன். எனக்கு சிறுவயதில் இயேசுவைப் பற்றி போதித்த எனது தாயார் மற்றும் எனக்கு சிறுவர் வகுப்புகள் எடுத்த எனது பக்கத்து வீட்டு அக்கா என பல பெண்களுக்கு இந்த பொக்கிஷத்திலே பங்கு உண்டு. விடுதலை வீரர் மோசேயின் வாழ்க்கையிலும் ஆறு பெண்கள், அவருடைய உயிரைக் காப்பற்றியுள்ளார்கள். அவர்களது பெயர்கள் வேதத்தில் பிரபலமாக இல்லாவிட்டாலும், இவர்கள் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்து, தைரியமாக சத்துருவை எதிர்த்துநின்று, திறமையாக துரிதமாய் துணிவுடன் செயல்பட்டு மோசேயின் உயிரைக் காப்பாற்றி இஸ்ரயேல் தேசம் உருவாக காரணமாக இருந்துள்ளார்கள். இந்த ஆறு பெண்களின் வாழ்க்கை சம்பவங்களை நிச்சயமாக ஒவ்வொரு பெண்களும் அறிந்திருக்க வேண்டும்.

சிப்பிராள், பூவாள் என்ற மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்து ஆண் குழந்தைகளைக் காப்பாற்றியதால் மோசேயும் காப்பாற்றப்பட்டார். ஆகவே தேவன் அவர்களுக்கு நன்மை செய்தார், மேலும் அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார். யோகெபெத் தியாக உள்ளத்துடன் குழந்தையைக் காப்பாற்றி, திறமையாக நாணல்பெட்டி மூலமாக மோசேவைக் காப்பாற்றியதால், தேவன் அவளுடைய மூன்று பிள்ளைகளையும், இஸ்ரவேலை அடிமைத்தனத்திலிருந்து மீட்கும் மிகப்பெரிய ஊழியத்துக்கு அழைத்ததைப் பார்க்கிறோம். மிரியாம் ஞானமாய் துணிவுடன் ராஜகுமாரத்தியுடன் பேசி மோசேயை காப்பற்றியதின் மூலம் கர்த்தர் அவளை வேதாகமத்தின் முதல் தீர்க்கதரிசியாக மாற்றினார். ராஜகுமாரத்தி பித்தியா எபிரெய குழந்தை மோசேயை தனது சொந்த மகனாக ஏற்றுக் கொண்டு காப்பாற்றியதால் தேவன் அவளை யூதேயா கோத்திரத்துடன் இணைத்து தமது சொந்த மகளாக மாற்றினார். சிப்போராள் மீதியானிய தேசத்து பெண்ணாக இருந்த போதிலும் தேவனுக்கு கீழ்ப்படிந்து மோசேயின் உயிரைக் காப்பாற்றிய படியால் அவளையும் தேவன் இஸ்ரவேல் பயணத்தில் இணைத்துக் கொண்டார்.

“உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார்” (சங்கீதம் 121:3) என்ற வாக்குத்தத்தம் உங்கள் குடும்பத்துக்கு சொந்தமானது. தேவனுக்குக் கீழ்படிந்த ஆறு பெண்களையும் தேவன் உயர்த்தினார். நன்மைகள் செய்தார். ஆசீர்வதித்தார். குடும்பங்களை தழைக்கும்படி செய்தார். நீங்களும் குடும்பமாக தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும் போது கர்த்தர் உங்கள் குடும்பத்தை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையமிடுகிறார். அதை யாரும் முறிக்க இயலாது. “உன்னை தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்” (சகரியா 2:8) என்று கர்த்தர் உங்கள் குடும்பத்தைப் பார்த்து சொல்ல வேண்டும். நீங்களும் இந்த ஆறு பெண்களைப் போல கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து உங்கள் குடும்பத்தின் ஆசீர்வாதத்தைப் சுதந்தரித்துக் கொள்ளுங்கள்!


கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

http://www.vvministry.com/ -- எமது இலவச அனுதின மின்னஞ்சல்களைப் நீங்கள் பெறவோ அல்லது உங்கள் ஜெப உதவிக்கோ எமது தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.

To recive our Daily devotional in Whatsapp. Save the number +91 99 16 424517. Then send "NEED DAILY DEVOTIONAL".

0 Response to " மோசேவின் வாழ்க்கையில் ஆறு பெண்கள் "

Post a Comment