விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

எல்லையை பெரிதாக்கும் தேவன்


தேவரீர் என்னை ஆசீர்வதித்து என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னை துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும். நாளாகமம்: 4–10 வேதத்தில் ஒரு மனிதன் இருந்தான். அவன் பெயர் யாபேஸ். அவனுடைய பெயரின் அர்த்தம் என்னவென்றால் துக்கம். சபிக்கப்பட்டவன். அவன் தாய், ‘நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன்’ (நாளாகமம் 4:9) என்று சொல்லி அவனுக்கு ‘யாபேஸ்’ என்று பெயரிட்டாள். தன் தாயே தன்னைப் பற்றி இப்படி சொன்னால், சகோதரர்களும், நண்பர்களும், உறவினர்களும் எப்படியெல்லாம் அவனை துக்கப்படுத்தி இருப்பார்கள்? அவனுடைய மனம் எந்தளவுக்கு வேதனைப்பட்டிருக்கும் என்று சற்றே யோசித்துப்பாருங்கள். ஆனாலும் அவன் கொஞ்சமும் சோர்ந்து போகாமல் தேவனை நோக்கிப் பார்க்கிறான். யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி ‘தேவரீர் என்னை ஆசீர்வதித்து என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னை துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும்’ (நாளாகமம்: 4–10) என்று வேண்டிக்கொண்டான். அவன் வேண்டிக் கொண்டதை தேவன் அருளினார். அதுமாத்திரமல்ல, யாபேஸ் தன் சகோதரரைப் பார்க்கிலும் சிறப்பு பெற்றவனாக இருந்தான் என்று வேதம் சொல்கிறது. ஒருவேளை அவன் தன் சூழ்நிலையை மட்டுமே பார்த்திருந்தால் துக்கத்தில் ஆரம்பித்த அவனுடைய வாழ்க்கை துக்கத்தில்தான் முடிந்திருக்கும். ஆனால் அவனோ ‘ஒரு தாய் தன் பிள்ளையை மறந்தாலும் நான் உன்னை மறவேன்’ என்று சொன்ன தேவனை மட்டுமே நோக்கிப் பார்த்தான். அதனால்தான் தன் சகோதரரைப் பார்க்கிலும் அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும், கனம் பெற்றவனாகவும் இருந்தான். ஆம் பிரியமானவர்களே, ஒரு வேளை நீங்களும் இந்த யாபேசைப் போல பெற்றோர்களாலும் மற்றவர்களாலும் நொறுக்கப்பட்டும், நெருக்கப்பட்டும் துக்கத்தின் பாதையில் கடந்துசென்று கொண்டிருக்கிறீர்களா? உங்களை விசாரிக்க ஒருவர் உண்டு.உங்கள் கண்ணீரையும், கதறலையும் காண்கிற தேவன் ஒருவர் உண்டு.அவர் மனுஷன் பார்க்கிற விதமாக பார்க்கவில்லை. மனுஷனோ முகத்தைப் பார்க்கிறவன். ஆனால் தேவனோ உங்கள் இருதயத்தை ஆராய்ந்து பார்க்கிறவர். ஆகையால், நீங்கள் எப்பொழுதெல்லாம் சோர்ந்து போகிறீர்களோ, அப்பொழுதெல்லாம் யாபேஸ் தேவனை நோக்கிப் பார்த்தது போல் நீங்களும் தேவனை மட்டுமே நோக்கிப்பாருங்கள். அவர் நேற்றும், இன்றும் என்றுமே மாறாத தேவன். யாபேசை ஆசீர்வதித்த தேவன் உங்களையும் ஆசீர்வதிக்க வல்லவராய் இருக்கிறார். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென் கிறிஸ்துவின் பணியில் விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள் http://vvministry.blogspot.in/ குறிப்பு: இந்த கர்த்தருடைய செய்தியை நீங்களோ அல்லது உங்கள் நண்பர்களோ பெற விரும்பினால் Email முகவரியை எங்களுக்கு அனுப்புங்கள்.

0 Response to " எல்லையை பெரிதாக்கும் தேவன் "

Post a Comment