விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

அப்போஸ்தலர் சீமோன் பேதுரு

இயேசுவின் பன்னிரெண்டு சீடருள் முதன்மையான இடத்தை சீமோன் பேதுரு பெற்றிருந்தார். சீமோன் என்றால் "செவிகொடுப்பவர்" என்று அர்த்தம். ஆனால் சீமோனோ தனக்கு தான் எல்லோரும் செவிகொடுக்க வேண்டும் என்று வாழ்ந்து வந்தார். இவருடைய சொந்த ஊர் பெத்சாயிதா. இவருடைய தகப்பன் பெயர் யோனா. பேதுரு தன் மனைவியோடும், மாமியாரோடும், பல மக்களை இயேசுவுக்கு அறிமுகப்படுத்திய சகோதிரன் அந்திரேயாவோடும் கப்பர் நகூமில் வசித்து வந்தார். 

1. இயேசுவோடு தொடர்புடைய வாழ்க்கை
சீமோனின் சகோதிரன் அந்திரேயா, யோவான் ஸ்நானகனின் அருளுரையை கேட்டு நண்பரோடு சென்று திருமுழுக்குப் பெற்று அவருக்கு சீடன் ஆனார். ஒரு நாள் இயேசு தன்னை நோக்கி வருவதைக்கண்ட யோவான் ஸ்நானகன் இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டிஎன்றார். இதைக் கேட்ட அந்திரேயா இயேசுவை பின்தொடர்ந்து அவருடன் அன்று தங்கினார். பின்னர் அந்திரேயா, சீமோனிடம் சென்று மேசியாவை கண்டோம்என்று சொல்லி பேதுருவை இயேசுவினிடத்தில் அழைத்து வந்தான். இயேசு சீமோனைக்கண்டு, “யோனாவின் மகனாகிய சீமோனே, நீ கேபா எனப்படுவாய்”. கேபா என்றால் அரமேய மொழியில் பாறை”, “கல்என்று பொருள்படும். கிரேக்கத்தில் பத்ரோஸ் - Petros” என்றும், இலத்தீனில் பத்ரூஸ்-Petrus” என்றும், ஆங்கிலத்தில் பீட்டர் என்றும், தமிழ்லில் பேதுரு அல்லது இராயப்பர் என்றும் அழைக்கப்படுகிறார். சீமோன் ஆத்திர குனமுள்ளவனும், அவசர பேச்சாளனுமாயிருந்தார். பிற்காலங்களில் இந்த குணங்கள் நீக்கப்பட்டு உறுதியான பாறையைப் போலிருபான் என்று அறிந்தவராய் இயேசு அவருக்கு அந்த பெயரை வழங்கினார். பின்பு ஒருநாள் கலிலேயாக் கடலில் பேதுரு இரவு முழுவதும் முயன்றும் ஒரு மீனும் அகப்படாத நிலையில் இயேசுவின் குரலுக்கு இணங்கி ஆழத்தில் வலையைபோட்டு வலை கிழியும் அளவிற்கு மீன்களை பிடித்தார். அப்பொழுது இயேசு, பயப்படாதே ! இது முதல் நீ மனிதரைப் பிடிக்கிறவனாய் இருப்பாய்என்று பேதுருவுக்கு ஒரு சிறப்பான அழைப்பை விடுத்தார், பேதுரு உடனே கீழ்படிந்து எல்லாவற்றையும் விட்டு அவரை பின்பற்றினார்.

ஐந்து அப்பம், இரண்டு மீன்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த பின்னர் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கடலின் மறுகரைக்கு படகின் மூலம் செல்ல வலியுறுத்தினார். கொடிய புயலினால் படகு மூழ்கும் தருவாயில் இயேசு கடல் மேல் நடந்து வந்ததைப் பார்த்து நானும் தண்ணீரில் நடந்து வரவேண்டும்என்று நடந்தார் பேதுரு. இயேசுவை நோக்குவதை விட்டு அலைகளை நோக்க ஆரம்பித்து கடலில் மூழ்கையில் இயேசு பேதுருவின் கையை பிடித்து தூக்கி அவரது விசுவாசத்தை வளத்தார். இயேசுவின் சீடர்கள் பலர் பின் வாங்கி போனதினால் வருத்தமடைந்தவராய் பன்னிருவரையும் நோக்கி, “நீங்களும் போய்விட மனதாயிருகிறீர்களோஎன்றார். பேதுரு இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே! யாரிடத்தில் போவோம், நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டேஎன்றார். பின்னர் ஒருமுறை இயேசு பன்னிருவரையும் நோக்கி, ”மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள்என்று கேட்டதற்கு, பேதுரு தயக்கமின்றி, “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துஎன்றார். இயேசு பேதுருவை நோக்கி, “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லைஎன்றார். இவ்வாறு திருச்சபையின் முதல் அஸ்திபாரக்கல் பேதுருவானார். பின்னர் எருசலேமில் தமக்கு நேரிடப்போவதை இயேசு முன்அறிவிக்கபேதுரு இயேசுவைத் தனியே அழைத்துகொண்டு போய், “இது உமக்கு நேரிடக்கூடாதேஎன்றார். இயேசு பேதுருவைப்பார்த்து, “எனக்கு பின்னாகப்போ, சாத்தானேஎன்று கடிந்து கொண்டார். என்றார்.

எர்மோன் மலையில் இயேசு அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்”. இயேசுவின் மகிமையை கண்டுகொண்டார் பேதுரு. ஆயினும் அவர் அமைதியாய் இல்லாமல் இயேசுவுக்கு எந்த துன்பமும் வரக்கூடாது எனக்கருதிஅங்கேயே இயேசு, மோசே, எலியா மூவருக்கும் தனித்தனியே கூடாரம் அமைக்கும் படியாய் தகாத யோசனையையும் கூறினார். இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தின நாள் இரவில் ஒரு மேல்வீட்டு அறையில் பஸ்கா பண்டிகையை அனுசரிக்க கூடினர். யூதகுடும்பத்தில் விருந்தாளி யாராவது வந்தால், அந்த வீட்டின் வேலைக்காரன் சென்று அந்த விருந்தினரின் பாதங்களை கழுவிய பின்தான் அவர்கள் உள்ளே வருவார்கள், ஆனால் இது ஒரு தனியான அறை. கால்களை கழுவுவதற்கு வேலைக்காரன் இல்லை. எல்லா சீடர்களும் வெறுப்புடன் அறையினுள் கால்களை கழுவாமலே சென்றனர். வேலைக்காரன் செய்யும் வேலையை நாம் செய்தால், தங்கள் பெருமைக்கு குறைவு வந்துவிடும் என்று சொல்லி யாரும் யாருடைய கால்களையும் கழுவ முன்வரவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் இயேசு தனது சீடர்களின் கால்களைக் கழுவத்தொடங்கினார். பேதுருவின் அருகில் இயேசு வந்த போது, “நீர் எனது கால்களைக் கழுவக்கூடாதுஎன்று தடுத்தார். அதற்கு இயேசு, “உன் கால்களை நான் கலுவாவிட்டால், என்னிடத்தில் உனக்கு பங்கில்லைஎன்றவுடன் பேதுரு, “ஆண்டவரே! என் கைகளையும் என் தலையையும் கூடக் கழுவ வேண்டும்என்று தமது அன்பை வெளிபடுத்தினார் பேதுரு. 

இதன் மூலம் சீடர்கள் தாழ்மையை கற்றுகொண்டனர். பின்னர் இயேசு தாம் சிலுவையில் மரிக்க வேண்டிய தருணம் வந்தமையால், “பிள்ளைகளே, இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருப்பேன், நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனாலும் நான் போகிற இடத்துக்கு நீங்கள் வரக்கூடாதென்றுஎன்றார். பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, நான் இப்பொழுது உமக்குப் பின்னே ஏன் வரக்கூடாது? உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன்என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்காக உன் ஜீவனைக் கொடுப்பாயோ? சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாயென்று, மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்என்றார். பின்னர் இயேசு சீடருடன் கெத்சமனே என்னப்பட்ட இடத்திற்குவந்து, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், “என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள்என்று சொன்னார். இயேசு வியாகுலப்பட்டு ஜெபிக்கையில் சீடர்கள் தூங்கினார்கள். இயேசு பேதுருவை நோக்கி சீமோனே, நித்திரை பண்ணுகிறாயா? ஒரு மணி நேரம் நீ விழித்திருக்கக்கூடாதா?” என்றார். எப்பொழுதெல்லாம் பேதுரு தவரு செய்தாரோ அப்பொழுதெல்லாம் இயேசு பேதுருவை சீமோன்என்று அழைத்து எச்சரித்தார்.

சிறிது நேரத்திற்குள்ளாக காட்டி கொடுக்கும் யூதாஸ் உடன் ஒரு கூட்டம் வந்து இயேசுவைப் பிடித்தனர். பேதுரு தன்னுடைய உரையிலிருந்து கத்தியை எடுத்து பிரதான ஆசாரியனின் வேலைக்கரனாகிய மல்கூசின் வலது காதை வெட்டினார். இயேசு அந்த கதை ஒட்டி குணப்படுத்தினார். பேதுரு காட்டிய சிறிது நேர துணிவின் விளைவு அவரை கோழைத்தனத்திற்க்கு வழி காட்டியது. முதலில் பேதுரு இயேசுவை தூரத்தில் பின் தொடர்ந்து பிரதான ஆசாரியன் அரண்மனை முற்றம் வரை சென்றார். யோவானைப்போல இயேசுவின் அருகே நிற்க வேண்டியவன், இப்படி வெளிய நின்ற கூடத்தில் ஒருவறாய் குளிர் காய்ந்து கொண்டு இயேசுவையும் மூன்று முறை மறுதலித்து சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினார். உடனே சேவல் இரண்டாந்தரம் கூவிற்று. சேவல் இரண்டுதரங் கூவுகிறதற்குமுன்னே நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று இயேசு தனக்குச் சொன்ன வார்த்தையைப் பேதுரு நினைவு கூர்ந்து, மிகவும் அழுதார். இயேசுவின் சிலுவை மரணமும், தமது இறுதி மறுதளிப்பும் பேதுருவை மிகவும் பாதித்தது. அழுகை அழுக்கை கழுவும்என்பது நல்மொழி. மனம்கசந்து அழுதமையால் அழுக்கு நீங்கி சுத்தமானார் பேதுரு. 

இயேசு உயிர்த்தெழுந்த நாளன்று காலையில், விழுந்து போன ஆவியுள்ள பேதுருவுக்கு ஒரு உற்சாகமான வார்த்தை காத்திருந்தது. ஒரு தேவ தூதன் கல்லறையிலிருந்து, அவருடைய சீடரிடத்திற்கும், பேதுருவினிடத்திற்கும் போய் சொல்லுங்கள்என்றான் (மாற்கு 16:6-7). தனிப்பட்ட பேதுருவின் பெயரைக் கூறியதின் இயேசு தன்னை மன்னித்தார் என்று உற்சாகம் கொண்டு கல்லறைக்குள் ஓடினார். இயேசு மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தார் என்பதை உணர்ந்து கொண்டார். பின்னர் சாயங்கால வேளையில் சீடர்களுக்கு காட்சி தந்தார். பின்பு ஒருநாள் ஏழு சீடர்கள் பேதுருவின் தலைமயில் மீன்பிடிக்க கலிலேயா கடலுக்குள் சென்றனர். விடியற்காலமானபோது, இயேசு கலிலேயா கடலின் கரையிலே கரி நெருப்பு போட்டு அப்பதொடும் மீன்களோடும் காத்து நின்றார். அவரை இயேசு என்று, சீடர்கள் தாமதமாகவே அறிந்து கொண்டார்கள். இயேசு, அப்பத்தையும் மீனையும் எடுத்து, அவர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் போஜனம்பண்ணின பின்பு, இயேசு சீமோன் பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்று மூன்று முறை கேட்டார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்என்றான். இயேசு பேதுருவை நோக்கி: என் ஆடுகளை மேய்ப்பாயாகஎன்று சொல்லி திருசைபையை பேதுருவிடம் இறை ஒப்படைப்பு செய்தார். இவ்வளவு தடுமாற்றம் மற்றும் பின்மாற்றங்களுக்கு பின்பதாக சீமோன் இப்பொழுது பேதுருவாய் பாறை போன்று திடமுள்ளவராய் மாறியிருந்தார்.

2. பேதுருவின் திருச்சபை வாழ்க்கை
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தபின் இயேசு தம் சீடர்களுக்கு காட்சி தந்து நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வர காத்திருங்கள்என்று கட்டளையிட்டார். இயேசு பரமேரிய பின்பு சீடர்கள் எருசலேம் சென்று, பதினோரு சீடர்களும், இயேசுவின் தாயாகிய மரியாளும், வேறு சகோதர, சகோதிரிகளுமாய் 120பேர் காத்திருந்து ஜெபித்தார்கள். பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்கள் அணைவரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள் (அப் 2:1-5). பின்னர் பேதுரு ஆற்றிய முதல் அருளுரையைக் கேட்டு ஏறக்குறைய மூவாயிரம் பேர் மனம்திரும்பி, இயேசுவை ஏற்றுக்கொண்டு, ஞானஸ்நானம் பெற்றார்கள். இவ்வாறு முதல் திருச்சபை உருவாயிற்று.

பின்னர் ஒருநாள் பேதுருவும் யோவானும் தேவாலயம் சென்றனர். பிறந்தது முதல் சப்பாணியாயிருந்த ஒருவன் அவர்களிடம் பிச்சை கேட்டான். அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி; அவனை நடக்க செய்தார். ஜனங்களெல்லாரும் இதைக்கண்டு மிகவும் பிரமித்தார்கள் (அப் 3:1-10). இந்த வாய்ப்பை பயன்படுத்தி பேதுரு அருளுரையாற்றினார். இந்த செய்தியை கேட்டு ஏறக்குறைய ஐயாயிரம் மக்கள் இயேசுவை விசுவாசித்தார்கள். பேதுரு சனகரீம் சங்கத்தை குற்றப்படுதினார் என சொல்லி பிரதான ஆசாரியர் விசாரிக்கையில் அவர்களுக்கும் இயேசுவுவைக் குறித்து அருளுரையாற்றினார். பேதுருவும் யோவானும் மறுநாள் வரையிலும் காவலில் வைக்கப்பட்டார்கள். அவர்கள் இயேசுவைக் குறித்து பேசக்கூடாது என்று கட்டளையிட்டார்கள். நாங்கள் கண்டவைகளையும், கேட்டவைகளையும் பேசாமலிருக்க கூடாதேஎன்று சொல்லி தொடர்ந்து கிறிஸ்துவைக் குறித்து பிரசங்கித்து வந்தார்கள் (அப் 4:8-12). சமாரியாவில் பிலிப்புவின் பிரசங்கத்தை கேட்டு ஞானஸ்நானம் பெற்றவர்களை சந்திக்க பேதுருவும், யோவானும் சமாரியா சென்றனர். அவர்கள் மேல் பேதுரு கைகளை வைக்க அவர்கள் பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொண்டார்கள். இயேசுவின் உயர்த்தெழுதலை குறித்து சீடர்கள் சாட்சி கொடுத்தார்கள். அதைகேட்ட மக்கள் தங்கள் நிலங்களையும், வீடுகளையும் விற்று சீடர்களிடம் கொடுத்தார்கள். பரிசுத்தஆவியைப் பெற்றபின் ஏழை பணக்காரன் என வேறுபாடு இல்லாமல் வாழ ஒப்புகொண்டார்கள். அனனியா என்பவனும் அவனது மனைவியும் தங்கள் நிலத்தை விற்று அதில் ஒரு பங்கை வஞ்சித்து வைத்து கொண்டு பேதுருவிடம் பொய் சொல்லி அந்நிமிடமே மரித்துப்போனார்கள் (அப் 5:1-10).

அப்போஸ்தலருடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் ஜனங்களுக்குள்ளே செய்யப்பட்டது. திரளான மக்கள் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடத்தில் அதிகமதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள். பிணியாளிகளைப் படுக்கைகளின் மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள். சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் பிணியாளிகளையும் அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களையும் எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவர்களெல்லாரும் குணமாக்கப்பட்டார்கள். அப்பொழுது பிரதான ஆசாரியரும் அவனுடனேகூட இருந்த சதுசேயரும் பொறாமையினால் நிறைந்து, பேதுருவையும், யோவானையும் சிறைச்சாலையிலே வைத்தார்கள். கர்த்தருடைய தூதன் இராத்திரியிலே சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்து: நீங்கள் போய், தேவாலயத்திலே நின்று, இந்த ஜீவவார்த்தைகள் எல்லாவற்றையும் ஜனங்களுக்குச் சொல்லுங்கள் என்றான். அவர்கள் அதைக்கேட்டு, அதிகாலமே தேவாலயத்தில் பிரவேசித்துப் போதகம்பண்ணினார்கள். இதை அறிந்த பிரதான ஆசாரியர்கள், அவர்களை வரவழைத்து, அடித்து, இயேசுவின் நாமத்தைக் குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு, அவர்களை விடுதலையாக்கினார்கள். இயேசுவின் நாமத்துக்காகத் தாங்கள் பட்ட அவமானத்தை மேன்மையாய் எண்ணி, சந்தோஷமாய் ஆலோசனை சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய், தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள் (அப் 5:11-42).

பேதுரு எல்லோரையும் சந்தித்து வருகையில் லித்தா ஊருக்கும் சென்றார். அங்கே எட்டு வருடமாய் திமிர்வாதமுள்ளவனாய் இருந்த ஐனேயாவை இயேசுவின் நாமத்தினால் சுகமாக்கினார். அந்த சமயத்தில் யோப்பா நகரில் தேவனுக்கு கீழ்படிந்து வாழ்ந்து வந்த தொற்க்காள்என்னும் தபித்தாள்உடல் நலக்குறைவால் மரணமடைந்தாள். லித்தா ஊரிலிருந்த பேதுருவை, ‘தாமதமில்லாமல் தங்களிடத்தில் வரவேண்டுமென்று  சீடர்கள் அழைத்தனர். பேதுரு அங்குபோய் முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, பிரேதத்தின் புறமாய்த் திரும்பி: தபீத்தாளே, எழுந்திரு என்றான். அப்பொழுது அவள் தன் கண்களைத் திறந்து, பேதுருவைப் பார்த்து உட்கார்ந்தாள். இது யோப்பா பட்டணம் எங்கும் தெரியவந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள். (அப் 9:32-43). பின்னர் செசரியா நகரில், இத்தாலியா பட்டாளத்தில் நூறு பேருக்கு தலைவனான கொர்நெலேயு தேவனுக்கு கீழ்படிந்து வாழ்ந்து வந்த யூதரல்லாத புற இனத்தவன். தேவ தூதன் அவருக்கு தரிசனமாகி யாப்பா நகரில் பேதுரு உள்ளார்அவனை அழை என்றார். உடனே கொர்நெலேயு மூன்று பேரை அங்கு அனுப்பினான். பேதுருவும் புறஇனத்தவருக்காக ஒரு காட்சி கண்டு தெளிந்து, மறுநாள் அவர்களோடு செசரியா பட்டணத்திற்கு போனார். யூதரல்லாத புற இனத்தவரும் பரிசுத்த ஆவியைபெற்று ஞானஸ்நானம் பெற்றார்கள் (அப்10:1-48). இந்த நிகழ்ச்சியின் மூலம் இயேசு கிறிஸ்த்துவின் நற்செய்தி உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது என்று பேதுரு உணர்ந்தார்.

இயேசுவை அறிவித்த படியால் ஏரோது, யோவானுடைய சகோதிரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினால் கொலை செய்தான். பேதுருவையும் பிடித்து சிறையில் அடைத்தான். பேதுரு சிறையில் இருந்த போது சபை மக்கள் பேதுருவுக்காய் ஊக்கத்தோடு ஜெபித்தார்கள். பேதுரு இரண்டு சங்கிலிகளால் கட்டப்பட்டு இரண்டு சேவகருக்கு நடுவே நித்திரை பண்ணினார். கர்த்தருடைய தூதன் பேதுருவை விலாவிலே தட்டி எழுப்பி, தன் பின்னே வரச்செய்து, இரண்டு அடுக்கு காவலையும், இரும்புக் கதவையும் கடந்து தெருவுக்கு அழைத்து சென்று மறைந்தான். பேதுரு, மாற்குவின் தாயாகிய மரியாள் வீட்டுக்கு வந்தான்; அங்கே அநேகர் கூடி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் கதவைத் திறந்தபோது பேதுருவைக் கண்டு பிரமித்தார்கள் (அப்12:1-16). இவ்வாறு பேதுரு இரண்டு முறை தேவ தூதர்களால் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

3. பேதுருவின் இறுதி நாட்கள்
தொடக்க கால சிறந்த வரலாற்று ஆசிரியர் எசபியஸ் (Eusebius) எழுதியுள்ள Ecclesiastical History என்ற புத்தகத்தில் பேதுருவின் இறுதி நாட்கள் பதிவு செயப்பட்டுள்ளது. பேதுரு ஆதிச்திருச்சபையில் ஒரு பெருந்தலைவராக காணப்பட்டார். பேதுரு எருசலேமை விட்டு புற இனத்தவர்களுக்கு கிறிஸ்துவை அறிவிக்கும்படி சிரியா தேசத்திற்கு அருகில் இருக்கும் அந்தியோக்கியா சென்று அங்கு ஏழு வருடங்கள் பேராயராக பணியாற்றினார். முதன் முதலில் அந்தியோக்கியாவில் தான் சீடர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்ற பெயர் வழங்கிற்று (அப் 11:20-26). அங்கிருந்து மத்திய ஆசிய நாடுகளான பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, பித்தினியா நாடுகளுக்கு சென்று நற்செய்தியை அறிவித்தார் (1பேதுரு1:1-2). கி. பி – 69-ல் பேதுரு அந்தியோக்கியா சபையின் பொறுப்பை தனது சீடரான இவோடியஸ் (Evodius) என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு ரோமாபுரிக்கு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க சென்றார். பேதுருவின் மனைவியும் அவரோடு கூட மிஷனரி பயணம் செய்து ஊழியம் செய்து வந்தாள் (1கொரி 9:5). பேதுருவின் நற்செய்தி அறிவிப்பினால், அகரிப்பா அரசனின் நான்கு மனைவிகள் மனம் மாறினார்கள். தங்கள் வாழ்க்கை முறையையும் மாற்றிக்கொண்டார்கள். மேலும் அல்பினசின் மனைவி செந்திப்பாவும் தனது பாவ வாழ்கையை விட்டு பரிசுத்த வாழ்க்கைக்கு நேராய் திரும்பினாள். அகரிப்பாவும், அல்பினசும் பேதுருவின் மேல் கோபம் கொண்டு, அவரை கொலை செய்ய திட்டமிட்டனர். பேதுருவின் நண்பர்களும், திருச்சபை மக்களும் பேதுருவை காப்பாற்றி தப்பிக்க வழி செய்தார்கள். பேதுரு தொடர்ந்து ஊழியம் செய்ய வேண்டுமென அவர்கள் விரும்பினார்கள். பேதுரு தனது மனைவியை ரோமாபுரி சபை மக்களிடத்தில் விட்டு அங்கிருந்து ஓடத்தொடங்கினார். பேதுரு ஓடும பொழுது, இயேசு கிறிஸ்து எதிரே வருவதைக் கண்டார். பேதுரு அவரை நோக்கி, “ஆண்டவரே! நீர் எங்கே போகிறீர்?’ என்று கேட்டார். இயேசு பேதுருவை நோக்கி, “சிலுவையிலே அறையப்படுவதற்கு நான் ரோம் நகருக்கு போகிறேன்என்றார். அதற்கு பேதுரு ஆண்டவரே, நீர் மீண்டும் சிலுவையில் அறையப்படுவதற்க்கான காரணம் என்ன?” என்று கேட்டார். இயேசு, ‘நான் மீண்டும் சிலுவையில் அறையப்படுவதற்க்காகவே ரோம் நகர் செல்கிறேன்என்றார். பேதுரு எந்த இடத்திலிருந்து ஓடிவந்தரோ அந்த இடத்திற்குத் தனக்கு பதிலாகச் சிலுவை சுமக்கவே இயேசு செல்கிறார் என்று பேதுரு விளங்கிக் கொண்டார். பேதுரு மரிப்பதற்க்கு துணிந்து ரோம் நகருக்கு திரும்பினார். பேதுரு கண் முன்னே தன்னோடு ஊழியம் செய்த தன் மனைவியை சிலுவையில் அறைந்தார்கள். இந்த காட்சியை பேதுரு காணுமாறு கட்டாயப்படுத்தினார்கள். ஆனால் பேதுரு சிலுவையில் துன்பப்படும் தன் மனைவியைப் பார்த்து, நம் ஆண்டவர் நமக்காக சிலுவையில் தொங்கிய காட்சியை நினைத்துக்கொள்என்று ஊக்கப்படுத்தினார். (Eusebius, Ecclesiastical History, 3, 30). பேதுரு இந்த செயலை துணிவோடு செய்தபடியால், சிறைச்சாலைக்காரன் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார். தன் மனைவியை சிலுவையில் அறைந்ததை கண்டபின், பேதுருவை சிலுவையில் அறையும் நேரம் வந்தது. அப்பொழுது பேதுரு, என் ஆண்டவர் சிலுவையில் நேராய் அறையப்பட்டு மரித்ததைப்போல நான் அறையப்பட தகுதியற்றவன். என்னைத் தலைகீழாக சிலுவையில் அறையவேண்டும்” என்று கேட்டு கொண்டார். பேதுரு கேட்டு கொண்ட வண்ணமாகவே சிலுவையில் தலைகீழாக அறைந்தார்கள். (Eusebius, Ecclesiastical History, 3-1). இவ்வாறு ஆண்டவருக்காய் சிறந்த ஊழியம் செய்து இரத்த சாட்சியாய் மரித்து திருச்சபையின் மூலைக்கல் ஆனார் சீமோன் பேதுரு.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

7 Responses to " அப்போஸ்தலர் சீமோன் பேதுரு "