Tuesday, 22 April 2014
தேவன் தேடும் மனிதன்
கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளுக்கு,
பலமுள்ளவைகளை வெட்க்கபடுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளை தெரிந்துகொண்டார். (1 கொரி 1:27)
நம்முடைய தேவன் மிகவும் வித்தியாசமானவர், அவர் யாரை கொண்டும் மிகபெரிய காரியங்களை செய்ய வல்லவர். தேவன் ஒரு படித்த ஞானிகளையோ அல்லது பலசாலிகளையோ தேடி செல்வதில்லை. என்னால் ஒன்றும் முடியாது, நான் எளியவன் என்னை கொண்டு ஆண்டவர் எதாவது செய்ய முடியுமா என்று நீங்கள் சொல்லலாம், ஆனால் அவர் உங்களை கொண்டு தான் பெரிய காரியங்களை செய்வார் என்று மேலே வாசித்த வசனம் நமக்கு தெளிவுபடுத்துகிறது. ஆம் தேவன் இது போல நினைத்து கொண்டிருந்த அநேகரை அவர் பயன்படுத்திருக்கிறார். நாம் கிதியோனை குறித்து அநேக முறை கேள்விபட்டிருக்கலாம். அவரை தேவன் எப்படி பயன்படுத்தினார் என்பதை பற்றி சற்று தியானிக்கலாம்.
நியாயதிபதிகள் 6 ம் அதிகாரத்தை திருப்பி கொள்வோம். இஸ்ரவேல் ஜனங்கள் ஆண்டவரை மறந்து அந்நிய தேவர்களை வணங்கி கொண்டிருந்தனர், அதனால் தேவன் அவர்களை மீதியானியர் கைகளில் 7 வருடம் ஒப்பு கொடுத்தார். இஸ்ரவேல் ஜனங்கள் மீதியானியருக்கு பயந்திருந்தபடியால் குகைகளிலும், மலைகளிலும் பதுங்கி இருந்தனர். இஸ்ரவேலர் விதைக்கும் பொது மீதியானியர் திரள் கூட்டமாய் வந்து, அவர்களது விளைச்சலை கெடுத்து போவார்கள். மீதியானியர் செய்கைகளால் அவதியுற்ற இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டனர் (வச 6-10). ஒரு நாள் கர்த்தருடைய தூதன் கர்வாலி மரத்தின் கீழ் வந்து அமர்ந்தார் (வச11). அங்கே ஒரு மனிதன் மீதியானியருக்கு பயந்து கோதுமையை மறைத்து வைத்து கொண்டிருந்தான், அவன் பெயர் கிதியோன். அப்பொழுது கர்த்தருடய தூதன் அவனை நோக்கி "பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடு இருக்கிறார்" என்றார் மேலும் "உனக்கு இருக்கும் இந்த பலத்தோடே போ, இஸ்ரவேலரை மீதியானியர் கையில் இருந்து இரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா" என்றார். அதற்கு அவன், இந்த காரியம் எப்படி என்னால் முடியும், என்னுடைய குடும்பத்தில் மிகவும் சிறியவன் என்று தயங்கினான், ஆனால் கர்த்தர் அவனை விடவில்லை, "நான் உன்னோடே கூட இருப்பேன்" என்று சொல்லி அவனை தேற்றினார். இது போல தான் நாமும் சில நேரங்களில் ஆண்டவர் நம்மை அழைக்கும் போது, என்னால் முடியாது, எனக்கு தகுதி இல்லை, நான் பலவீனமானவன் என்று காரணங்களை சொல்லி விலகி செல்ல பார்க்கிறோம். அப்படிப்பட்ட நம்மை நோக்கி தான் கர்த்தர் சொல்கிறார் "நான் உன்னோடே கூட இருப்பேன்", என்று, ஆண்டவர் நம்முடன் இருக்கும் போது எந்த காரியத்தையும் குறித்து தயங்காமல் உடனே செயல்பட வேண்டும்.
கிதியோன் கூட ஆண்டவர் இருந்த படியால், வெறும் 300 பேரின் துணையுடன், மீதியானியரை சந்திக்க பாளையத்திற்கு சென்றான். மீதியானியரின் எண்ணிக்கை கடற்கரை மணல் போல திரளாக இருந்தது. கர்த்தர் அவனோடு இருந்தபடியால் இரட்சிப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு கையில் பானை, தீவட்டி மற்றும் எக்காளத்துடன் சென்றனர். இவர்கள் எல்லையின் ஓரத்தில் நின்று கொண்டு பானைகளை உடைத்து, எக்காளத்தை ஊதினார்கள். இந்த சத்தத்தை கேட்ட படையினர் தங்களை தாங்களே பட்டயத்தால் வெட்டி கொண்டனர். இப்படியாக கர்த்தர் மீதியானியர் கையில் இருந்து இஸ்ரவேல் மக்களுக்கு இரட்சிப்பை கிதியோன் மூலம் கிடைக்க செய்தார். நம்மை அழைத்த தேவன் உண்மையுள்ளவர், அவர் தம்முடைய பணிக்காக அழைக்கும் போது கீழ்படிந்து சென்றால் நிச்சயமாகவே அவர் உங்கள் மூலம் அநேகருக்கு இரட்சிப்பு கிடைக்க செய்வார். ஒருவேளை கிதியோனை போல நான் சிறியவன், என்னால் முடியுமா என்று கேள்விகள் இருந்தால், உங்களை பார்த்து தேவனாகிய கர்த்தர் சொல்கிறார் (எரே 1:7,8) இல், "சிறு பிள்ளை என்று சொல்லாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்" என்று. சாமுவேலை போல, "ஆண்டவரே சொல்லும் அடியேன் கேட்கிறேன்" என்று உடனே அவருடைய வார்த்தைக்கு கிழ்படிந்து செல்வோம். ஒருவேளை இந்த நாட்களில் “தேவன் தேடும் மனிதன்" நீங்களாக கூட இருக்கலாம்.
Message by
Bro. Raffi Jashua
Universal Revival Youth Fellowship
News letter available @ http://uryfindia.blogspot.in/
0 Response to " தேவன் தேடும் மனிதன் "
Post a Comment