விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

கர்த்தருடைய பட்டயம், கிதியோனுடைய பட்டயம்


வளமிக்க வயல்களைப் பாழாக்கும் வெட்டுக்கிளிகளைப் போல் மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கத்தியரும் திரள் திரளாக இருக்கிறார்கள். அந்தச் சமயத்தில், இஸ்ரவேலில் நியாயாதிபதிகள் ஆளுகை செய்துவருகிறார்கள். மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கத்தியரும் ஒட்டகத்தில் கூட்டம் கூட்டமாக வந்து ஏழாண்டு காலமாக தேசத்தை கொள்ளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கொள்ளைக்காரர்களுடைய மந்தைகள் நாலாபுறமும் சென்று பச்சைப் பசேலென காட்சியளிக்கும் அனைத்தையும் கபளீகரம் செய்கின்றன. இஸ்ரவேலரோ நம்பிக்கையிழந்து நிற்கிறார்கள். ஏன் இத்தகைய துன்பம்? ஏனென்றால் இஸ்ரவேலர் பொய் தெய்வங்களை வழிபடுகிறார்கள். அதனால், ஒடுக்குகிறவர்களிடம் கர்த்தர் அவர்களை ஒப்படைத்துவிடுகிறார். தாக்குப்பிடிக்க முடியாத கட்டத்தில் இஸ்ரவேலர் உதவிக்காக கர்த்தரை நோக்கி கூக்குரலிடுகிறார்கள். அவர் செவிகொடுத்துக் கேட்பாரா? இஸ்ரவேலருடைய அனுபவம் நமக்குப் புகட்டும் பாடம் என்ன? நியாயாதிபதிகள் 6:1-6. ‘பராக்கிரமசாலியா’? இஸ்ரவேல் விவசாயிகள் பொதுவாக எருதுகளைப் பூட்டி காற்றோட்டமான வெட்டவெளியில் கோதுமையை போரடிப்பார்கள். அப்போதுதான், கோதுமை மணிகளை முறத்தில் எடுத்துவிடும்போது பதர்களைக் காற்றடித்துச் செல்லும். ஆனால் தேசத்தைக் கொள்ளையிட்டுச் செல்லத் துடிக்கும் கொள்ளைக் கூட்டத்தாருடைய அச்சுறுத்தல் இருப்பதால் இந்த வேலைகளெல்லாம் அவர்களுடைய பார்வையில் பளிச்சென பட்டுவிடும். ஆகவே, மீதியானியருக்குத் தெரியாமல் மறைந்திருந்து ஒரு திராட்சை ஆலையில் கோதுமையை கிதியோன் போரடிக்கிறார்; இந்த ஆலை ஒரு பாறையில் குடையப்பட்ட பெரிய தொட்டிபோல் இருந்திருக்கலாம். (நியாயாதிபதிகள் 6:11) அங்கே கோதுமை மணிகளை சிறியளவில் மட்டுமே ஒரு தடியால் அடிக்க முடிந்திருக்கலாம். இத்தகைய சூழல்களில், கிடைக்கும் வாய்ப்பை கிதியோன் பயன்படுத்திக் கொள்கிறார்.

கர்த்தரின் தூதன் கிதியோனுக்குத் தரிசனமாகி, ‘பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார்’ என்று சொல்கிறபோது அவருக்கு உண்டாகும் ஆச்சரியத்தை கற்பனை செய்து பாருங்கள். (நியாயாதிபதிகள் 6:12) திராட்சை ஆலையில் இரகசியமாக தானியங்களைப் போரடிக்கும் கிதியோன் நிச்சயமாகவே தன்னை ஒரு பராக்கிரமசாலியென நினைத்துக்கொள்வதில்லை. என்றாலும், இஸ்ரவேலில் வீரதீரமிக்க ஒரு தலைவராக கிதியோன் இருக்க முடியுமென்ற நம்பிக்கை கடவுளுக்கு இருந்ததை அந்த வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன.

கர்த்தர் ஒவ்வொரு மனிதனையும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடனே உருவாக்கியுள்ளார். கிதியோன் போல எதிரிகளுக்கு (சாத்தானுக்கு) பயந்த நிலையில் வாழ்ந்து வருகின்றீர்களா? கர்த்தர் இன்றைக்கு உங்களை நோக்கி உலகத்தின் காரியங்களால் பராக்கிரமசாலியே என்று அழைக்கின்றார். கர்த்தர் அன்றைக்கு கிதியோனை பராக்கிரமசாலியே என்று அழைத்து ‘இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கும்’ பொறுப்பை கிதியோனிடம் கர்த்தர் ஒப்படைத்தார். கிதியோனோ தாழ்மையுடன் இவ்வாறு கூறுகிறார்: “ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன்” என்று கர்த்தரிடம் தனது நிலையை கூறுகின்றார். கர்த்தரோவென்றால் தாழ்மையில் சிறியவனாக காணப்பட்ட கிதியோனைக் கொண்டு மிகப்பெரிய விடுதலையை இஸ்ரயேல் ஜனங்களுக்கு கொடுத்தார். இதை வாசிக்கின்ற நீங்கள் ஒருவேளை தாழ்மையில் சிறியவனாக காணப்படுவீர்கள் என்று சொன்னால் கர்த்தர் உங்களைக் கொண்டு பெரிய காரியங்களை செய்ய முடியும் என்பதை மறவாதிருங்கள். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென் விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " கர்த்தருடைய பட்டயம், கிதியோனுடைய பட்டயம் "

Post a Comment