தாவீதும் அவன் மனுஷரும் அந்தப் பட்டணத்திற்கு வந்தபோது, இதோ, அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்கள் மனைவிகளும் தங்கள் குமாரரும் தங்கள் குமாரத்திகளும் சிறைப்பிடித்துக் கொண்டு போகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள். அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த ஜனங்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள் (1 சாமுவேல் 30:3,4).
தங்கள் பிள்ளைகளும் மனைவிகளும் சிறைபிடிக்கப்பட்டு போனார்கள் என்று தாவீது கேள்விபட்டபோது, எந்த தகப்பனால் சும்மா இருக்க முடியும்? தாவீதும் அவனோடு இருந்த ஜனங்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்களாம். அந்த அளவு இருதயபாரத்தால் அவர்கள் நிறைந்திருந்தார்கள். அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி; நான் அந்தத் தண்டைப் பின்தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின்தொடர்; அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக் கொள்வாய் என்றார். அதன்படியே அவர்கள் அந்த தண்டை பின்தொடர்ந்த போது, அவர்களுடைய பகைஞர் கொள்ளையாடிக் கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும் பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும் ஒன்றும் குறைபடாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான்.
ஒரு வேளை நீங்களும் பெலனில்லாமல் போகுமட்டும் அழுகிறீர்களோ? உங்கள் வாழ்க்கையில் காணப்படும் பாடுகள் நிமித்தம் யார் என்னை விடுவிப்பார் என்று கதறுகிறீர்களோ? தாவீதின் தேவன் இன்றும் மாறாதவராய் இருக்கிறார். அவர் நம் கண்ணீரை துடைக்கிற தேவன். அவரை உறுதியாய் பற்றிக் கொண்டு என்னை விடுவியும் என்று அவர் பாதத்தை பிடித்து கொண்டு விடாதிருங்கள். உங்கள் கண்ணீர் அவர் பாதத்தில் சிந்தப்படட்டும். அப்பொழுது ‘மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்’ - (யோவன் 16:20) என்று நேற்றும் இன்றும் என்றும் மாறாத இயேசுகிறிஸ்து உங்கள் துக்கங்களை சந்தோஷமாய் மாற்றுவார். கண்ணீரை துடைத்து கொள்ளுங்கள்.
நம் கண்ணீர் ஒரு நாளும் வீணாய்போவதில்லை. அது அவருடைய துருத்தியில் வைக்கப்பட்டிருக்கிறது. அன்று ஆகாரின் கண்ணீரை கண்ட தேவன், அவளுக்கு பதிலை கொடுத்ததினால் அல்லவா, அவள் அவருக்கு எல்ரோயி என்று பேரிட்டாள்! ஏல்ரோயி என்பதற்கு ‘என்னை காண்கின்ற தேவன்’ என்று பொருள். ஒருநாள், நாம் கர்த்தருடைய சமுகத்தில் நிற்கும்போது, நமது கண்ணீரால் நிறைந்த துருத்தியை நம்மிடம் கொண்டு வந்து நம் தேவன் காட்டுவார், அருமை மகளே, மகனே, இதோ நீ சிந்திய கண்ணீர்! நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் பார், ஒரு சொட்டையும் விடாமல் நான் சேர்த்து வைத்திருக்கிறேன்’ என்று காட்டுவார். மட்டுமல்ல, தமது புத்தகத்தை திறந்து, எதற்காக கண்ணீர் வடித்தோம் என்பதையும் தாம் எழுதியிருப்பதை நமக்கு காட்டுவார்! அல்லேலூயா!
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
http://vvministry.blogspot.in/
குறிப்பு: இந்த கர்த்தருடைய செய்தியை நீங்களோ அல்லது உங்கள் நண்பர்களோ பெற விரும்பினால் Email முகவரியை எங்களுக்கு அனுப்புங்கள்.
0 Response to " உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் "
Post a Comment