விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

விண்ணப்ப ஜெபம் (25 May 2014)“உன் விண்ணப்பத்தைக் கேட்டேன். உன் கண்ணீரைக் கண்டேன். இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்” (ஏசா. 38:5).

விண்ணப்ப ஜெபம் என்பது, பழைய ஏற்பாட்டிலே தூபவர்க்கத்தில் சேர்க்கப் பட்டும் வெள்ளைப்போள பிசினுக்கு அடையாளமாயிருந்தது. வெள்ளைப்போள மரத்தின் பட்டையை கூரிய கத்தியினால் சீவும்போது, அதிலிருந்து வெண்மையான, இனிய வாசனையுடைய பிசின் சுரந்து வருகிறது. அதன் சுவை, சற்று கசப்பானது. இந்த பிசினை காய வைத்து, இடித்து, தூளாக்கி, சுகந்த வாசனையுள்ள கந்த வர்க்கங்களை உண்டாக்குவார்கள். அது தேவ சமுகத்திலே சுகந்த வாசனையாய் ஏறெடுக்கப்படும். விண்ணப்பத்திற்கு அடையாளமாகும். இதற்கு நல்ல உதாரணம், எசேக்கியா ராஜாவின் விண்ணப்பமாகும்.

ஏசாயா தீர்க்கதரிசி, எசேக்கியா ராஜாவிடத்தில் வந்து, நீர் உமது வீட்டுக் காரியத்தை ஒழுங்குப்படுத்தும் நீர் பிழைக்கமாட்டீர். மரித்துப்போவீர் என்று கர்த்தருடைய வார்த்தையை அறிவித்தபோது, அந்த வார்த்தைகள் அவருடைய உள்ளத்தை கூரிய கத்தியால் கிழிப்பது போன்றிருந்தது. அப்பொழுது அவருக்கு நாற்பது வயதுக்குள்ளாகத்தான் இருந்திருக்கக்கூடும் என்று வேத பண்டிதர்கள் சொல்லுகிறார்கள். அவர், நொறுங்குண்ட இருதயத்தோடு, “ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும், மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்க நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினார், எசேக்கியா மிகவும் அழுதார்” (ஏசா. 38:3. “விண்ணப்பம்” என்று சொல்லும்போது, அது ஒரு குழந்தைபோல தன்னைத் தாழ்த்தி, அழுது அழுது தேவனுக்கு தெரியப்படுத்தும் வேண்டுதலாயிருக்கிறது. அது கர்த்தருடைய உள்ளத்தை உருக்குகிறது. அவர் அந்த விண்ணப்பத்தின் ஜெபத்துக்கு நிச்சயமாகவே பதில் தருவார். நம்முடைய ஆண்டவராகிய இயேசுவும்கூட, அழுது, விண்ணப்பம்பண்ணி, பிதாவினுடைய முகத்தை நோக்கிப் பார்த்தார் அல்லவா? (எபி. 5:7) எருசலேமைப் பார்த்து அதற்காக கண்ணீர் விட்டு அழுதார் (லூக். 19:41). தேவபிள்ளைகளே, நீங்கள் கண்ணீரோடு விண்ணப்பம் பண்ணும்போது, கர்த்தர் இந்த பூமியிலேயிருந்த நாட்களில், உடைந்த இருதயத்தோடு, ஏறெடுத்த விண்ணப்பங்களையெல்லாம் நினைவுகூர்ந்து, உங்களுக்கு நிச்சயமாகவே நல்ல பதிலைத் தருவார்.

பிள்ளைகளே, இல்லாத அன்னாள், தன்னுடைய சக்களத்தியின் வார்த்தை யினால், இருதயத்தில் குத்தப்பட்டு, மனம் கசந்து தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணினாள். கர்த்தர் அந்த ஜெபத்தைக் கேட்டு தீர்க்கதரிசியாகிய சாமுவேலை கொடுத்தார். ஆகவே அன்னாள் சாட்சியாக, “இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம் பண்ணினேன். நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தின்படி, எனக்குக் கட்டளையிட்டார்” என்றாள் (1 சாமு. 1:27). தேவபிள்ளைகளே, உங்களுக்கு அப்.பவுல் கொடுக்கிற ஆலோசனை என்ன? “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப் பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” (பிலி. 4:6). உங்களுடைய ஜெபத்திலே மன்றாட்டு இருக்கலாம். வேண்டுதல் இருக்கலாம். ஆனால் கண்ணீரோடு ஏறெடுக்கும் விண்ணப்பம் மிக, மிக வல்லமையுள்ளதாயிருக்கிறது.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

http://www.vvministry.com/sms_email.html -- தினமும் உங்கள் E mail முகவரிக்கு கர்த்தருடைய செய்தியையும் வேத வசனத்தை உங்கள் மொபைலுக்கு SMS மூலமாகவும் பெற விரும்பினால் கொடுக்கபட்ட LINK-ல் உள்ள படிவத்தை நிரப்பவும்.

0 Response to " விண்ணப்ப ஜெபம் (25 May 2014) "

Post a Comment