விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

விசுவாசிகளின் தந்தையான ஆபிரகாம்

விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான்போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான். எபிரேயர் 11:8

ஆபிரகாமுக்கும் தன்னுடைய வாழ்க்கையில் விலைக்கிரயம் செலுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவன் பொருட்கள், உறவினர்கள், நிலங்கள் மற்றும் தங்கள் சகோதர சகோதரர்களோடு அத்தேசத்தில் நல்லதோர் வாழ்க்கை வாழ்ந்துவந்தார்கள். இந்நிலையில் திடீரென்று தேவன் ஆபிரகாமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போஎன்று அழைப்பு விடுக்கின்றார் (ஆதி 12:1). இந்த வெளிப்பாட்டை ஆபிரகாம் தேவனிடத்தில் பெற்றபின்பு தன்னுடைய தேசத்தை, இனத்தை, தகப்பன் வீட்டை மற்றும் உறவினர்களை விட்டுவிட்டு தேவன் கொடுத்த வெளிப்பாட்டை நோக்கி புறப்பட்டுவிட்டான். வெளிப்பாட்டை பெற்ற ஆபிரகாம் பெரியதோர் விலைக்கிரயத்தையும் செலுத்தவேண்டியதாயிருந்தது. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன். பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்’ (ஆதி 12:2-4) என்று தேவன் ஆபிரகாமை நோக்கிச் சொன்னபோது அதற்காக ஆபிரகாம் விலைக்கிரயம் செலுத்தவேண்டியதாயிருந்தது. எனினும், ஆபிரகாம் இந்த காரியத்தில் பின்வாங்காமல் விலைக்கிரயம் செலுத்தியபடியினால் இன்று விசுவாசிகளின் தகப்பன்என்று அழைக்கப்படுகின்றான்.

மற்றவர்கள் தங்கள் ஜனங்களோடு, உறவினர்களோடு இருப்பதை நாம் பார்க்கும்போது, நாம் ஏன் வீட்டை விட்டு இவ்வளவு தூரத்திற்குச் சென்று ஊழியம் செய்யவேண்டும் என்ற எண்ணம் நமக்குள் உண்டாகின்றது. உறவினர்கள் வாழும் இடங்களில் வாழவே இன்றய நாட்களில் மக்கள் விரும்புகின்றார்கள். அவர்களை விட்டுவிட்டு தூரத்தில் சென்று வசிப்பதை பெரும்பாலானோர் விரும்புவதில்லை. தங்களது இன்ப துன்ப நேரங்களில் அவர்களின் உதவி தங்களுக்குக் கிடைக்கும்படி அருகிலே வசிப்பதே நலம் என்றே அநேகர் நினைக்கின்றனர். முழு உலகமும் என்னால் ஆசீர்வதிக்கப்படும் என்றால் அதற்காக நான் விலைக்கிரயம் செலுத்த ஆயத்தம் என்ற சிந்தையும் உணர்வும் ஆபிரகாமிடத்தில் காணப்பட்டது. இன்று எல்லாரும் ஆபிரகாமை எங்கள் பிதா என்று சொல்லுகின்றனர். ஆபிரகாமின் மடியே பரதீஷ் என்றும் சொல்லிவந்தனர் (லூக் 16:22). ஆபிரகாமுக்கு இப்படிப்பட்டதான உயர்ந்த ஸ்தானம் எப்படி கிடைத்தது? அவன் விலைக்கிரயம் செலுத்தியபடியினாலே அந்த ஸ்தானத்தைப் பெற்றுக்கொண்டான்.

ஆபிரகாம் விலைக்கிரயம் செலுத்தினான் ஆனபடியினால், இன்று மக்கள் எல்லாரும் நாங்கள் ஆபிரகாமின் பிள்ளைகள் என்று கூறுகின்றனர்.பாடனுபவிக்கப் புறப்பட்ட மோசே அநித்தியமான பாவ சந்தோஷங்களை அநுபவிப்பதைப் பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு, இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்பதிலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான். எபிரேயர் 11: 25,26. இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து அழைத்துவர தேவனால் பயன்படுத்தப்பட்ட பாத்திரமாகிய மோசேயும் தனது வாழ்வில் விலைக்கிரயம் செலுத்தினான். அவன் எகிப்தின் பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான். நான் ஏன் தேவ ஜனங்களோடுகூட துன்பத்தை அனுபவிக்கவேண்டும்? என்று அவன் நினைக்கவில்லை. மோசேயைப்போல ஒரு தீர்க்கதரிசி எழும்பினதில்லை என்றும் அவனுடைய பாடல்கள் பரலோகத்திலும் பாடப்படுகின்றன என்றும் நாம் வேதத்தில் வாசிக்கின்றோம். விலைக்கிரயம் செலுத்துவதினால் பயனுண்டா என்று நாம் நினைக்கலாம். ஆனால், நிச்சயம் விலைக்கிரயம் செலுத்துவதில் நிச்சயம் பலனுண்டு. ஒருவேளை இன்று நாம் அதை காணமுடியாமல் அதை அனுபவிக்கமுடியாமல் இருக்கலாம். ஆனால், நாம் நம்முடைய வாழ்க்கையில் விலைக்கிரயம் செலுத்துவோமானால் நாமும் அவர்களைப்போல உயர்ந்த ஸ்தானங்களில் தேவனால் வைக்கப்படுவோம்.

நாம் இரட்சிக்கப்படும்படிக்கு இயேசுவின்மேல் விசுவாசம் வைக்கிறோம். ஆனால், விசேஷித்த ஸ்தானத்தை நாம் தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அதற்காக நாம் விலைக்கிரயம் செலுத்தவேண்டியது அவசியமே. நான் வீணாக என்னுடைய வாலிபத்தை,பொருளை, நேரத்தை, தாலந்துகளை செலவழிக்கிறேன் என்ற சிந்தையை சாத்தான் நம்முடைய மனதில் கொண்டுவரும்போது நாம் அதனை வெற்றிகொண்டு விலைக்கிரயம் செலுத்த ஆயத்தமாவோம். மேன்மையான ஸ்தானங்களை தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொள்வோம்.

By –
சகோ.அகஸ்டின் ஜெபக்குமார்

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்0 Response to " விசுவாசிகளின் தந்தையான ஆபிரகாம் "

Post a Comment