விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

கடவுளின் வழி அதிசயமானது

என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். ஏசாயா55:8

சாது சுந்தர் சிங் ஒரு நாள் இமயமலை அடிவாரத்தில் நடந்து கொண்டிருந்தார். சிறிது தூரத்தில் அவர் நடந்து சென்ற பாதையானது இரண்டாக பிரிந்ததது. எது சரியான வழி என்று தெரியாமல் திகைத்து நின்றார். பின்பு இயேசுவிடம் தன்னை சரியான வழியில் நடத்துமாறு ஜெபித்துவிட்டு, இடது பக்கம் செல்லும் வழியில் சென்றார். 11 மைல் அதாவது 17 கிலோ மீட்டர் நடந்து சென்ற பிறகே தான் தப்பான வழியில் வந்து விட்டோம் என்று அவர்க்கு தெரிய வந்தது. சற்று மனம் வருந்தினாலும், ஜெபித்து தானே இந்த வழியில் வந்தேன் என்று தன் மனதை தேற்றிகொண்டார். பாதை தவறியதில் கடவுளுக்கு ஏதோ நோக்கம் இருகின்றது என்ற உணர்வோடு திரும்பி நடக்க தொடங்கினார். அப்பொழுது பாதை ஓரத்தில் அமர்ந்திருந்த மனிதன் அவரை நோக்கி கூப்பிட்டான். சாது சுந்தர் சிங் அவன் அருகில் சென்றார். அந்த மனிதன் சாதுவை இந்து சன்னியாசி என்றெண்ணி தனது கையிலிருந்த வேத புத்தகத்தை மறைத்து வைத்தான். பின்பு அவன் சாதுவை நோக்கி, இயேசு கிறிஸ்துவைப் பற்றி என்ன நினைகின்றீர்கள்? என்று மெதுவாய் கேட்டான். அப்பொழுது சாது மிகவும் மகிழ்ந்து, அவரே என் இரட்சகர். அவர் என்னை இரட்சிக்கிறார் என்று சொன்னார்.

அதைக் கேட்ட அந்த மனிதன் மிகுந்த குதூகலத்தோடு, இயேசு கிறிஸ்துவைப் பற்றி போதிக்க ஒருவரை அனுப்ப வேண்டுமென்று நான் ஆண்டவரை நோக்கி வேண்டிக் கொண்டிருந்தேன். தான் மறைத்து வைத்திருந்த புதிய ஏற்ப்பாடு புத்தகத்தை சாதுவிடம் காண்பித்து, அதை தான் ஒழுங்காக படித்து வருவதைக் கூறினார். அதில் சில பாகங்களின் அர்த்தங்களை தன்னால் புரிந்து கொள்ள இயலவில்லை என்று ஜெபித்து வந்தேன். அந்த காரியங்களை விளக்கி தருவதற்கென்றே இயேசு உங்களை இங்கு அனுப்பி இருகின்றார் என்றார். இதைக் கேட்ட சாது சுந்தர் சிங்கிற்கு, தான் வழி தவறியதர்க்கான தேவ ரகசியம் பிடிபட்டது. ஆண்டவரின் அதிசயமான நடத்துதலைப் பற்றி ஆழமாய் உணர்ந்து கொண்டார். அந்த இரவில் அந்த மனிதனுடைய வீட்டில் தங்கி, மகிழ்வுடன் வேதத்தின் உள்அர்த்தங்களை அந்த மனிதனுக்கு கற்ப்பித்து கொடுத்தார். மனிதனுடைய கோணலான வழிகளை மாற்றி அவனை சரியான வழியில் நடத்தும் கர்த்தரை எண்ணி துதித்தார்.

நமது வாழ்க்கையிலும் கூட இது போன்றதான சூழ்நிலைகளை நாம் கடந்து வந்திருக்க கூடும். அன்றைக்கு இஸ்ரயேல் ஜனங்களை எகிப்திலிருந்து நடத்தி சென்ற மோசே கடவுள் தன்னை கடலுக்கு நேராய் வழிநடத்திய போது கர்த்தருடைய வழியில் நடந்தார். எதிரியின் படைகள் துரத்த, சொந்த ஜனங்களும் எதிர்க்க கடவுள் நடத்திய வழியிலிருந்து அவர் பின் வாங்கவில்லை. இறுதியில் கடலுக்கு அடியில் கர்த்தர் வைத்திருந்த அற்புத வழியில் தானும், தன்னோடு கூட ஒரு தேச மக்களையும் நடத்திச் சென்றார்.தேவன் நியமித்திருக்கிற வழியில் நாம் செல்வதற்கு, அதாவது கண்களால் பார்க்க முடியாத பாதையில் நடந்து செல்வதற்கு தேவையானது தேவன் பேரிலுள்ள விசுவாசம். ஏனென்றால் எந்த ஒரு மனிதரும் கண்களால் பார்க்காமல் எதையுமே நம்பமாட்டார்கள். காண முடியாத அந்த பாதையில் நடந்து செல்வதற்கு விசுவாசமும், அந்த பாதையின் முடிவில் இருக்கின்ற தேவனுடைய பலன் என்ன என்பதை அறிந்தும் இருந்தால் மட்டுமே, அதில் பயணிக்க முடியும். ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் கர்த்தரின் நடத்துதளுக்காய் நாம் ஜெபித்து நமது நாளை தொடங்கும் பொழுது கர்த்தர் நம்மை, அவருக்கு சித்தமான வழியில் நடத்துவார்.

இந்த சிறிய ஜெபத்தை செய்யுங்கள். அன்பின் தெய்வமே இயேசுவே, கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள் (எபே 5:17) என்று வேதத்தில் சொல்லப்பட்டது போல உமது சித்ததின் படியாய் உமது வழியிலே என்னை நடத்தும். உமது நினைவுகளின் படியாய் நான் வாழ எனக்கு கிருபை பொழிந்தருளும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் நல்ல பிதாவே. ஆமேன்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " கடவுளின் வழி அதிசயமானது "

Post a Comment