விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான்

தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான்; ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும். அவர் காயப்படுத்திக் காயங்கட்டுகிறார்; அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது. யோபு 5:17-18

யோபு என்ற பக்தன் “தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான்” என்று தேவனை ஒரு தகப்பனைப் போல பார்க்கின்றார். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தவறு செய்யும் பொழுது அந்த குழந்தையை தண்டிப்பார்கள். ஏனென்றால் அந்த குழந்தையின் மீதுள்ள பாசம். இதே போலத்தான் தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் ஒரு சில நேரம் தவறு செய்யும் பொழுது தேவன் நம்மை தண்டிக்கின்றார். அப்படி நீங்கள் தண்டிக்க படுபவர்கள் பாக்கியவான்கள். ஏனென்றால் சர்வ வல்ல தேவன் நம்மீது பாசம் வைத்துள்ளாரே. ஆகவே தான் தாவீது சொல்கிறார், “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும் (சங்கீதம் 23:4). மேய்ப்பன் தன் கரத்தில் உள்ள கோலில் எந்த மிருகமும் மந்தையை நெருங்க விடாமல் காப்பார். அதே நேரம் வழிதவருகின்ற ஆடுகளை அந்த கோலினால் அடித்து தன்னிடமாய் சேர்த்து கொள்வார். கர்த்தருடைய கரத்தில் உள்ள கோலும் தடியும், நம்மை பாதுகாத்து நம்மை தேற்றும். ஆகவே அந்த கோலினால் நாம் ஒரு சில நேரம் தண்டனை பெற்றாலும், அதை அற்பமாக எண்ணாமல், அது நமது நன்மைக்கே என்று உணர வேண்டும்.

இரண்டாவதாக யோபு, தேவனை “காயப்படுத்திக் காயங்கட்டுகிறார்” என்று ஒரு மருத்துவரைப் போல பார்க்கின்றார். ஒரு மருத்துவரிடம் கால ஒடிந்த மனிதனை கொண்டு சென்றார்கள். அந்த மருத்துவர் காலை சற்று சரி செய்து எலும்போடு இணைத்து கட்டு போட தொடங்கினார். வேதனை தாங்க முடியாத மனிதன், காலில் உள்ள வலியை முதலில் நீக்குங்கள் பிறகு எலும்பை இணைத்து கட்டு போடலாம் என்று சொன்னார். அதற்கு அந்த வைத்தியர், முதலில் கட்டு தான் போட வேண்டும். சிறிது நாள் கழித்து வேதனை வழியெல்லாம் நீங்கிவிடும். பின்பதாக முன்பு போல நடக்கலாம் என்று கட்டு போட தொடங்கினார். வேதனைக்கு பின்பதாக இருக்கும் சுகத்தை அந்த மனிதன் புரிந்து கொண்டார். மருத்துவ தேவை நமக்கு இல்லையென்றால் மருத்துவர்களை, மனிதர்கள் சிந்தித்து கூட பார்க்கமாட்டார்கள். அதே நேரம் சிறிய காய்ச்சல் வந்துவிட்டால் மருத்துவர்களைத் தேடி ஓடுவார்கள். இதே போலத் தான் தேவனால் சிட்சிக்கப்படு, அவரது கோலினால் தண்டிக்கப்பட எந்த ஆட்டிற்கும் தேவனே மருத்துவராகவும் இருக்கின்றார். அடித்தவருக்கு தான் தெரியும் எந்த மருந்து போட்டால் சரியாகும் என்று. அநேக மனிதர்கள் தேவன் எனக்கு சோதனை கொடுத்து தண்டித்து விட்டார். இனிமேல் அவரருகில் போக மாட்டேன். உலகம் தருகின்ற சுகம் போதும் என்று தேவனுடைய மந்தையை விட்டு பின்வாங்கி போகின்றார்கள். மந்தைக்கு வெளியே பதிவிருக்கும் பொல்லாத மிருகங்களுக்கு இரையாக மாறுகின்றார்கள். யோபுவின் வாழ்கையைப் பாருங்கள் அவருடைய மாம்சம் பூச்சிகளினாலும், அடைபற்றின புழுதியினாலும் மூடப்பட்டிருந்த பொழுது சொல்கிறார், நீர் எனக்கு ஜீவனைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்; உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றினது” (யோபு 7:5 & 1௦:12) என்று. தேவன் தன்னை காப்பாற்றுவார் என்ற முழு நம்பிக்கையும் யோபுவிற்கு இருந்தது. பரிபூரண சுகமடைந்து இரட்டிப்பு நன்மைகளை பெற்றுக்கொண்டார். ஆம் பிரியமானவர்களே யோபு சொல்வதைப்போல, தேவன் நமக்கு தகப்பனாகவும், மருத்துவராகவும் இருகின்றார். நிச்சயமாக உங்கள் தேவைகளை சந்திப்பார். சரீரத்திலும் நல்லதோர் சுகத்தை தருவார். யோபுவைப்போல் விசுவாச அறிக்கை செய்யுங்கள். ஜெயம் பெறுங்கள்.

இந்த சிறிய ஜெபத்தை செய்யுங்கள். எங்கள் தகப்பனாகிய இயேசுவே,  காயப்படுத்தி கட்டுபோடுகிறவராய் இருப்பதற்காக ஸ்தோத்திரம். நீர்  அடித்தாலும் உமது கரம் என்னை தேற்றுகின்றது. உமது பராமரிப்பு எனது ஆவியையும், ஆத்துமாவையும், குடும்பத்தினரையும் பாதுகாக்கின்றது. உமது சிட்சையை நான் அற்பமாக நினைப்பதில்லை. உம்மால் நேசிக்கப்படுபவர்களையே நீர் சிட்சிக்கின்றீர் என்று அறிவேன். எனது வாழ்கையை உமது கரங்களில் தருகின்றேன்.இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் நல்ல பிதாவே. ஆமேன்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான் "

Post a Comment