விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்


சுவிஷேச பனியன் - Gospel T Shirt
மனுக்குலத்தை நேசித்த மகா தேவன்
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார். தேவன் இவ்வுலகில் உள்ள அனைத்தையும் உண்டாக்கினார். அவருடைய படைப்பில் மிகச்சிறந்த படைப்பு மனிதனே, ஏனென்றால் தேவன் மனிதனை தம்முடைய சாயலில் சிருஷ்டித்தார். அவர் மனிதனை ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார். தேவனாகிய கர்த்தர் மனிதனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனிதன் ஜீவாத்துமாவானான். தேவன் மனிதனை நேசித்தார். தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, அவர்களை ஆசீர்வதித்தார். பிள்ளைகளின் கீழ்ப்படிதலைப் பெற்றோர்கள் விரும்புவது போல தேவனும் மனிதனிடமிருந்து கீழ்ப்படிதலை எதிர்பார்த்தார்தேவன் மனிதனுக்கு சுயமாக முடிவெடுக்கும் திறனையும் தந்தருளினார், ஆனால் மனிதன் அதை தவறாக பயன்படுத்தி தேவனுக்கு கீழ்ப்படியாமற் போனான்.

மனிதன் மேல் விழுந்த பாவமென்னும் சங்கிலிகள்
மனிதனின் கீழ்ப்படியாமை நிமித்தம் பாவம் இவ்வுலகில் தோன்றியது. இந்த  பாவம் மனிதனை தேவனிடமிருந்துப் பிரித்தது. தேவன் பாவத்தை வெருக்கிறவராகவும் மனிதனை நேசிப்பவராகவும் இருக்கின்றார். ஆனால் பூமியிலே பாவம் பெருக மனிதன் தேவனை மறந்து போனான். பாவத்தின் சம்பளம் மரணம். நாம் எல்லோரும் பாவம் செய்து நரகத்தில் நித்திய மரண தண்டனை பெறுவதற்கு ஏதுவானோம். நன்மைகள் செய்வதின் மூலமாக இந்த பாவ சாபத்திலிருந்து மனிதனால் விடுதலை பெற முடியவில்லை.

பாவச்சங்கிலிகளை சிலுவையாலே உடைத்தார் இயேசு கிறிஸ்து
பாவம் நிறைந்த மனித இனத்தின் மீட்பிற்காக பாவ நிவாரண பலி தேவைப்பட்டது, ஆதலால் இயேசு கிறிஸ்து இவ்வுலகில் மனிதனாகப் பிறந்தார். இப்படியாக தேவன் தம்முடைய ஒரே குமாரனை தந்தருளி தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார். அவரை நம்புகின்ற அனைவருக்கும் நித்திய வாழ்வு உண்டு. பாவத்தின் நிமித்தம் தேவனுக்கும் மனிதனுக்கும் ஏற்பட்ட இடைவெளியை நீக்க இயேசு கிறிஸ்து இப்பூவில் தோன்றினார்.  எல்லாரையும் மீட்கும் பொருளாகத் சிலுவையிலே இயேசு கிறிஸ்து பலியாகி மனிதன் மேலிருந்த பாவ சாப சங்கிலிகளை உடைத்தெறிந்தார். மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார்.

விசுவாசத்தில் வாழ்க்கை
நாம் அனைவரும் நித்திய மரண தண்டனையில் இருந்து தப்புவதே தேவனின் விருப்பமாகும். இயேசு கிறிஸ்து ஒருவரே பாவத்தின் அடிமைத்தனத்தில் இருந்தும் நித்திய மரணத்திலிருந்தும் மனிதனை விடுவிக்க வல்லவர். அவரே பரலோகத்திற்கு செல்ல ஒரே வழி ஆவார். அவர் மூலமாய் அல்லாமல் யாரும் தேவனிடத்திற்கு சேர முடியாது. இயேசுவை உங்கள் வாழ்வில் பெற்று கொள்ள நீங்கள் எதையும் செய்ய வேண்டியது இல்லை. இயேசுவை சொந்த இரட்ச்சகராக ஏற்றுக் கொள்ள, உங்கள் பாவ நிலையை உணர்ந்து, மனம் திரும்பி இயேசுவை விசுவாசித்தால் போதும். இயேசுவை நீங்கள் உங்கள் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உங்கள் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்பட்டு புது வாழ்வைப் பெறுவீர்கள்.

முடிவெடு
நீங்கள் இப்போது எடுக்க போகும் முடிவு உங்கள் வாழ்வின் மிக முக்கியமான முடிவு . இயேசுவை நீங்கள் உங்கள் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உங்கள் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப் படுவீர்கள். உங்களது பாவத்தின் கிரயத்தை செலுத்துவதற்காக இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார். அவரை இரட்சகராக ஏற்றுக்கொண்டு, பாவங்களில் இருந்து விடுபட நமக்கு முழு சுதந்திரம் தந்திருக்கிறார். நீங்கள் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள விரும்பினால், பின்வரும் ஜெபத்தினை செய்யலாம்.

ஆண்டவராகிய இயேசுவே, நான் பாவி என்றும் நித்திய ஆக்கினைக்கு உரியவன் என்பதையும் உணர்கிறேன். நீர் தேவனுடைய குமாரன் என்பதையும், என் பாவத்தின் கிரயத்தை செலுத்துவதற்காக சிலுவையில் மரித்தீர் என்பதையும் விசுவாசிக்கிறேன். என் பாவங்களை மன்னித்து எனக்கு நித்திய ஜீவன் தருவதற்காக உமக்கு நன்றி. ஆண்டவரே, அனுதினமும் எனக்கு வழிக் காட்டி, சதா காலமும் என்னை நடத்தி செல்லும். ஆமென்.

0 Response to " "

Post a Comment