விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்


‘கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்’– யாத்.14:14 பிரச்சினைகள், போராட்டங்கள் வரும்போது சோர்ந்து போகாமல், தேவன் மேல் நம்பிக்கையாயிருந்து அவரையே சார்ந்து கொள்ளும்போது ஆண்டவர் உங்கள் வாழ்வில் அற்புதங்களைச் செய்வார். சத்துரு பலவிதங்களில் உங்கள் குடும்ப வாழ்வை தாக்க வரும்போது ஆண்டவர் நமக்குச் சொல்லுகிற ஒரு காரியம் என்ன தெரியுமா? ஆண்டவர் இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து ‘சும்மாயிருங்கள்’ என்று சொன்னார். ஆனால் ஆண்டவர் சும்மாயிருக்கவில்லை. இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டு விடுதலையாக்கப்பட்டு வெளியேறின போது மீண்டும் பார்வோனின் சேனை அவர்களைப் பின் தொடர்ந்தது. முன்பக்கம் செங்கடல், பின்பக்கத்திலோ பார்வோனின் சேனை. தப்பிப்பதற்கு வாய்ப்பே இல்லாத சூழ்நிலை. பிரியமானவர்களே! ஒருவேளை நீங்களும் இப்படிப்பட்ட சூழ்நிலைகளினூடே கடந்து சென்று கொண்டிருக்கலாம். எல்லா பக்கங்களிலும் கதவு அடைக்கப்பட்டிருப்பது போல காணப்படலாம். என்ன செய்வதென்று தெரியாத சூழ்நிலையிலே நீங்கள் அமர்ந்து சும்மாயிருப்பதையே தேவன் எதிர்பார்க்கிறார். நாம் அமர்ந்திருந்தால் தான் தேவனுடைய கிரியைகளைக் காண முடியும். ஆண்டவர் இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து சும்மாயிருங்கள் என்று சொன்னார். ஆனால் ஆண்டவர் சும்மாயிருக்கவில்லை. அல்லேலுயா! ஆண்டவர் செங்கடலை இரண்டாக பிளந்தார். இஸ்ரவேல் ஜனங்களை அழகாக நடந்து போகப் பண்ணினார். அதே செங்கடலிலே பார்வோனின் சேனையை கலங்கடித்து, அழித்துப் போட்டார். இன்றும்கூட அதே தேவன் உங்களைப் பார்த்து சொல்லுகிற ஒரு வார்த்தை, ‘சும்மாயிருங்கள்’. பிரச்சினைகள் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறதா? வேதனைக்கு மேல் வேதனை வந்து கொண்டிருக்கிறதா? எல்லாப் பக்கங்களிலும் நெருக்கப்படுகிறீர்களா? எனக்கு ஒரு வழியுமே தெரியவில்லையே என திகைத்துக் கொண்டிருக்கிறீர்களா? மனிதர்களால் வரும் நிந்தையை, போராட்டத்தை தாங்க முடியவில்லையா? சும்மாயிருங்கள். சும்மாயிருங்கள் என்றால், உங்கள் சொந்த ஞானத்தையோ, பெலனையோ, திறமைகளையோ, குடும்பத்தையோ நம்பாமல் தேவனையே நம்பி அவரையே சார்ந்து கொள்ளுவது தான். அவர் அற்புதம் செய்யும் வரைக்கும் உங்கள் கண்கள் அவரையே நோக்க வேண்டும். அப்பொழுது நிச்சயம் ஆண்டவர் உங்கள் வாழ்வில் ஒரு அற்புதத்தை செய்வார். உங்கள் சத்துருக்களை தகர்த்துப் போட்டு, உங்களுக்காக ஒரு பந்தியை ஆயத்தப்படுத்துவார். எனவே பிரியமானவர்களே! சோர்ந்து போகாதிருங்கள். விரைவில் அற்புதங்களை காண்பீர்கள். உங்கள் துக்க நாட்கள் முடிந்துபோகும். உங்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும், குடும்பங்களிலும் தேவன் அற்புதங்களை செய்ய வல்லவராயிருக்கிறார். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென் கிறிஸ்துவின் பணியில் விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள் http://vvministry.blogspot.in/ இந்த கர்த்தருடைய செய்தியை நீங்களோ அல்லது உங்கள் நண்பர்கள் பெற விரும்பினால் Email முகவரியை எங்களுக்கு அனுப்புங்கள்.

0 Response to " கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார் "

Post a Comment