விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

உங்கள் வாழ்வு துளிர்க்கும்

நான் தெரிந்துகொள்ளுகிறவனுடைய கோல் துளிர்க்கும்” (எண்ணாகமம் 17:5)

இஸ்ரயேல் மக்கள் வானந்திரத்தில் மோசேவினால் நடத்தப்படுகையில் கோராகு என்ற மனிதன் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாய் எழும்பினார். இந்த கோராகு இஸ்ரயேல் புத்திரரில் சபைக்கு தலைவர்களாகவும் பிரபலங்களாகவும் இருந்த 25௦ பேரை தன்னிடத்தில் சேர்த்துக் கொண்டு தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட மோசேவுக்கும் ஆரோனுக்கும் விரோதமாக தூண்டி விட்டான் (எண் 16:2). பிரபல தலைவர்கள் கோராகுவோடு கைகோர்த்து நிற்ப்பதைக் கண்ட இஸ்ரயேல் மக்களுக்கு, யார் கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்? என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் பூமி பிளந்து கோராகுவின் குடும்பத்தை விழுங்கியது. மேலும் கோராகுவோடு கைகோர்த்து கலகம் செய்த பிரபல தலைவர்களாகிய 25௦ பேரையும் கர்ததருடைய அக்கினி பட்சித்து போட்டது (எண் 16:32-35). வனாந்திரத்தில் மக்கள் மரிப்பதைக் கண்ட இஸ்ரயேல் மக்களுக்கு கர்த்தரால் அழைக்கப்பட்டது யார்?” என்ற சந்தேகம் மேலும் வழுத்தது (எண் 16:41). இந்த நிலையில் கர்த்தர் தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மோசே மற்றும் ஆரோன் என்பதை மக்களுக்கு காண்பிக்கும் வண்ணம் இஸ்ரயேலின் பன்னிரண்டு கோத்திரங்களும், ஒரு கோலை தன்னுடைய சந்நிதிக்கு கொண்டு வரும்படியாய் கட்டளையிடுகிறார். நான் தெரிந்துகொள்ளுகிறவனுடைய கோல் துளிர்க்கும் என்று சொல்லி ஆரோன் பெயர் எழுதியிருந்த லேவி கோத்திரத்தின் கோலை துளிர்க்க செய்தார் கர்த்தர்.

மோசேயை ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அழைத்தார். யோசுவாவை மோசேக்கு பின் இஸ்ரவேல் ஜனங்களை நடத்தி செல்ல அழைத்தார். ஏசாயாவை தரிசனத்தின் மூலம் அழைத்தார். நெகேமியாவை அழைத்தார். எரேமியாவை தாயின் கர்ப்பத்தில் உருவாகுமுன்னே அழைத்தார். பன்னிரண்டு சீடர்களை அழைத்தார். பவுலை அழைத்தார். இப்படி சொல்லி கொண்டே போய்.. கர்த்தர் உங்களையும் தெரிந்து கொண்டு அழைத்திருப்பதை சொல்லி நிறுத்தலாம்.

ஆம் பிரியமானவர்களே, நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு நாமம் தரித்தேன்” (ஏசாயா45:4) என்ற படியாக கர்த்தர் நம்மை தெரிந்து கொண்டுள்ளார். நம்முடைய வாழ்க்கை அல்லது ஊழியம் கனியற்றதோர் நிலையில் இருக்கலாம். கர்த்தர் நமது வாழ்க்கையை துளிர்க்க செய்யும் படியாய் ஒரு சில காலங்களில் வறண்ட அல்லது காய்ந்த நிலைமையை அனுமதிகின்றார். அன்று வறண்ட நிலையில் இருந்த உயிரற்ற அந்த கோலை, தேவனுடைய சந்நிதியில் அவருடைய பிரசன்னத்தில் வைத்த பொழுது அந்த கோல் உயிர் பெற்று துளிர்த்தது. நாமும் தேவ பிரசன்னத்திற்குள் நுழையும் போது, நமது வாழ்க்கையும் துளிர்விடுகிறது! பூப்பூக்கிறது! வாதுமைப் பழங்களைக் கொடுக்கிறது!.

அன்பு தேவ பிள்ளையே, உங்கள் வாழ்க்கை காய்ந்துபோய் காணப்படுகிறதா? ஒருவேளை உங்கள் சரீரத்தில் சுகவீனத்தையும் ஆவிக்குரிய வாழ்வில் பெலவீனத்தையும் உணருகின்றீர்களா? . நம்பிக்கையோடு தேவ பிரசன்னத்திற்க்குளும், ஜெப ஜீவியத்ததிற்க்குளும், வேத வாசிப்பிற்க்குள்ளும் கடந்து வாருங்கள்!. பெயர் சொல்லி அழைத்து உன்னை தெரிந்துகொண்டவர், நிச்சயமாக உங்களது வாழ்க்கையை துளிர்விட்டு பூ பூக்க செய்வார். நீங்கள் காய்த்து கனி கொடுப்பீர்கள். ஆமேன்.


கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " உங்கள் வாழ்வு துளிர்க்கும் "

Post a Comment