விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

கண்ணீரை காண்பவர்


என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?. (சங்கீதம் 56:8). இந்த வசனம் தாவீதினால், கிறிஸ்து பிறப்பதற்கு முன் 1,020 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டதாகும். அந்நாட்களில் மத்திய கிழக்கு பகுதிகளில், ஒரு போர்வீரன் போருக்கு போவதற்கு முன், தன் மனைவி அல்லது தன் தாயிடம் ஒரு கண்ணீர் பாட்டிலை வாங்கி கொடுப்பான். அந்த கண்ணீர் பாட்டில் கண்ணீரின் வடிவிலே இருக்கும். அதன் மூடி ஒரு விசேஷித்த கார்க்கினால் மூடப்பட்டிருக்கும். அதனால் அதனுள் உள்ள கண்ணீர் ஆவியாக போகாது. அதை வாங்கும் தாயோ, மனைவியோ, அந்த போர் வீரனிடம், ‘நீ போவது எனக்கு மிகுந்த வேதனையை தருகிறது. நீ வரும்வரை நான் உன்னை நினைத்து கண்ணீர் வடித்து கொண்டிருப்பேன். இரவெல்லாம் நான் வடிக்கும் கண்ணீரை இந்த பாட்டிலில் சேர்த்து வைத்து நீ வரும்போது, நீ எனக்கு எவ்வளவு விசேஷித்தவன் என்பதை வெளிப்படுத்தும் வகையில் உனக்கு பரிசளிப்பேன்’ என்று சொல்வார்களாம். கி.பி. 100 ம் வருடத்தில், எகிப்தில் உள்ள பார்வோனின் கல்லறையில் நிறைய கண்ணீர் பாட்டில்களை கண்டெடுத்தனர். அவைகள் அந்த பார்வோனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்தன. அமெரிக்காவில் ஒருமுறை உள்நாட்டு கலவரம் வெடித்தபோது, அநேக போர்வீரர்கள் மரித்தனர். அவர்களுடைய விதவைகள், முதலாம் வருடத்தில் அவர்களின் இறந்த நாளில் கல்லறைகளுக்கு சென்று, அந்த கண்ணீர் பாட்டிலில் உள்ள கண்ணீரை தெளித்து, அந்த முதலாம் நினைவு நாளை கொண்டாடினார்கள். இன்று வரை துக்கத்தில் இருப்பவர்களுக்கு பரிசாக வெளிநாடுகளில் சில இடங்களில் கண்ணீர் பாட்டில்களை கொடுக்கிறார்கள். இப்படத்தில் இருப்பதைப் போன்ற கண்ணீர் பாட்டில்கள் விற்கப்படுகின்றன. இந்த கண்ணீர் பாட்டில்கள் நம்வேதத்திலும் எழுதப்பட்டிருப்பது எத்தனை ஆச்சரியம்! நம் தேவன் நம் கண்ணீரை கண்டு சும்மா போய் விடுகிறவரல்ல. நம்முடைய கண்ணீர்கள் ஒரு துருத்தியில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கினறன. நம்முடைய வேதனைகள், பாடுகள், துக்கங்கள் எல்லாவற்றையும் அறிந்த தேவன் ஒருவர் உண்டு. அவருடைய துருத்தியில் நம் கண்ணீர் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. என் கண்ணீரை காண்கிறவர்கள் யாரும் இல்லை, என் துக்கங்களை காண்கிறவர்கள் யாரும் இல்லை, என் தலையணையை நான் கண்ணீரால் நனைக்கிறேன் என்று சொல்கிறீர்களா? உங்களை காணும் தேவன் உண்டு, உங்கள் கண்ணீரை கண்டு உங்களுக்கு விடுதலை அளிக்கும் தேவன் உண்டு. உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மைநோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார் என்று சங்கீதம் 22:24 ல் வாசிக்கிறோமே! நம்முடைய உபத்திரவத்தை பார்த்து, அதை அற்பமாய் எண்ணாமல், தம்மை நோக்கி கூப்பிடும்போது, கேட்டு பதில் கொடுக்கும் உன்னத தேவன் நம் தேவனல்லவோ!. சங்.116 :8 ல் என் கண்ணை கண்ணீருக்கு விலக்கி காத்தார் என்று சங்கீத காரன் சாட்சியிடுகிறார். யோபு.16 :20 ல் நம்முடைய நண்பர்கள், நம்மை பரியாசம் பண்ணுகிறபோது கடவுள் அந்த கண்ணீரை துடைத்தார். எசேக்கியா அரசன் உண்மையும், உத்தமுமானவர், அவருக்கு நோய் ஏற்பட்ட பொது, மரணம் சம்பவிக்கும் என்று ஏசாயா கூறுகிறார். எசேக்கியா ராஜா அழுதார், இறைவனை நோக்கி கூப்பிட்டார், இறைவன் அந்த கண்ணீரை துடைத்தார், 15 ஆண்டுகள் ஜீவனை கூட்டி கொடுத்தார். பிரியமானவர்களே, இவைகள் நமக்கு சாட்சிகள், இயேசு ஆண்டவர் நமது கண்ணீர் துடைக்கவே அவர் கண்ணீர் வடித்தார், இரத்த வேர்வை சிந்தினார், மரணத்தை ஏற்றுக் கொண்டார். நமக்காக அவர் உயிர் கொடுத்து ஆசீர்வாதம் தந்தார். நமது துக்கத்தை சமாதானமாக மாற்றுவார், எனவே கலங்காதே திகையாதே, கர்த்தர் உன் கண்ணீரைத் துடைப்பார். உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென் கிறிஸ்துவின் பணியில் விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள் http://vvministry.blogspot.in/ குறிப்பு: இந்த கர்த்தருடைய செய்தியை நீங்களோ அல்லது உங்கள் நண்பர்களோ பெற விரும்பினால் Email முகவரியை எங்களுக்கு அனுப்புங்கள்.

0 Response to " கண்ணீரை காண்பவர் "

Post a Comment