விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

கெம்பீர சத்தத்தோடு கர்த்தரை துதியுங்கள்


சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். சகரியா 2:10

தகப்பனும், தனது ஆறு வயது மகனும் மாலை பொழுதை கழிக்க அருகில் உள்ள பூங்காவிற்கு நடக்க செல்வார்கள். மகனை மிகவும் நேசித்த தகப்பன், அவனை தோள்களில் சுமந்து கொண்டு பூங்காவிற்கு செல்வார். ஒருநாள் மகன் நன்றாக நடப்பதை அறிந்த தகப்பன், பூங்காவிற்கு செல்லும்பொழுது தோள்களில் மகனை சுமந்து செல்லாமல், தன்னோடு கூட நடந்து வரும்படி சொல்லி முன்னதாக நடந்து சென்றார். பூங்காவிற்கு செல்லும் வழியில் ஒரு சாலை இருந்தது. அதுவரை தகப்பனுக்கு பின்னே சென்ற மகன் அந்த சாலையில் சென்ற வாகனங்களை கண்டு பயந்து விட்டான். தகப்பன் பின்னே சென்று சாலையை கடக்காமல் அங்கேயே நின்று விட்டான். சாலையைக் கடந்த தகப்பன், மகன் தன்னோடு வராமல் நிற்பதைக் கண்டு மீண்டும் அவனிடத்தில் வந்து, தன் கைகளை பிடித்து தன்னோடு வருபடியாய் கூறினார். அப்பொழுது அந்த மகன், இவ்வளவு நாள் என்னை தோளில் சுமந்து சென்றதால் நான் பயப்படவில்லை. இப்பொழுதோ நான் தனியாய் நடக்கின்றேனே என்றான். அப்பொழுது அந்த தகப்பன் மகனை நோக்கி, நீ சிறுவயதாய் இருக்கும் பொழுது உன்னை தூக்கி சுமந்தேன். இப்பொழுதோ நீ நன்கு வளர்ந்து விட்டாய். ஆகவே என் கைகளை பிடித்து என்னோடு நடந்து வா என்று தனது கரங்களை நீட்டினார். ஆணி பாய்ந்த அன்பின் கரத்தை இருக்கமாய் பிடித்தவாறு, சந்தோஷமாய் பாடியவாறு சாலையைக் கடந்தான் மகன். 

கெம்பீரித்துப்பாடு, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன்
ஏசாயா 12 :6 கூறுகின்றது, சீயோனில் வாசமாயிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்”. தேவனாகிய கர்த்தர், நமது வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் பெரியவராக இருகின்றார். இந்த விசுவாசம் நமக்குள் இருக்கும் பொழுது, அவரைத் துதிக்கும் கெம்பீர பாடல்கள் நமது இருதயத்திலிருந்து புறப்பட்டுக் கொண்டே இருக்கும். அந்த மகன் எப்பொழுது தனது தகப்பனை பார்ப்பதை விடுத்து சாலையில் செல்லும் அதிவேக வாகனகளை பார்க்க தொடங்கினானோ, அப்பொழுது அவன் இருதயத்தில் பயம் தொற்றிகொண்டது. பயந்த இருதயம் தேவனை நோக்கி அபயமிடுகிறது. தகப்பன் நம்மிடம் எதிர்பார்ப்பது வாழ்வின் எல்லா சூழ்நிலையிலும், நாம் அவரை கெம்பீர சத்ததோடு பாடி துதிக்க வேண்டும் என்பது தான். அப்பொழுது தேவனுடைய பிரசன்னம் நம்மோடு இருப்பதை நன்கு உணர முடியும். பெரியவராம் கர்த்தர் நம்மோடு இருந்து நமது வாழ்வில் பெரிய காரியங்களை செய்ய வேண்டுமென்றால், துதி பாடல் நிறைந்த இருதயத்தோடு நாம் காணப்பட வேண்டும். உலக காரியங்கள் தன்னை மேற்கொண்டு விடுமோ, பாவம் தன்னை மீண்டும் மேற்கொண்டு விடுமோ, எதிர் காலம் எப்படி இருக்குமோ இது போன்ற இருதயத்தின் பயங்கள் கெம்பீர துதி சத்ததை நிறுத்திவிடும். துதி இல்லாத இடத்தில் தேவனுடைய பிரசன்னம் குறைவு படுவதால், யோபு சொல்வதுப் போல நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது- (யோபு 3:25) நமது வாழ்விலும் நேரிடுகின்றது. இதை வாசித்துக் கொண்டிருக்கின்ற நீங்கள் உங்கள் இருதயத்தை ஒரு நிமிடம் ஆராய்ந்து பாருங்கள். இருதயத்தில் பயம் இருக்குமென்று சொன்னால் அதை களைந்து விட்டு கெம்பீர சத்தத்தோடு கர்த்தரை துதியுங்கள். தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார் என்று யோவேல் 2:21- ல் சொல்லப்பட்டதைப் போல, பெரியராம் கர்த்தர் உங்களுடைய வாழ்வில் பெரிய காரியங்களை செய்வாராக. 

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " கெம்பீர சத்தத்தோடு கர்த்தரை துதியுங்கள் "

Post a Comment