விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

இந்த மாத வாக்குத்தத்தம் (01 June 2014)



அவன் கர்த்தரைத் தேடின நாட்களில் தேவன் அவன் காரியங்களை வாய்க்கச் செய்தார். II நாளாகமம் 26: 5

ஐந்து மாதம் நம்மை கண்ணின் மணி போல நடத்தி ஆறாவது மாதத்தை நம்மை காணச் செய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம். உசியா அரசனானபோது அவனுக்கு பதினாறு வயது மட்டுமே (2 நாளா.26:1). இத்தகைய இளைஞன் ஒரு அரசின் பொறுப்பை எவ்வாறு வகிக்க முடியும்? யூத மக்களுடைய பொருளாதாரம், போக்குவரத்து, வீட்டுவசதி மற்றும் பொதுநலன் போன்றவைகளைக் கவனித்துப் ஞானமாய் செய்ய வேண்டிய முக்கியமான பணி. ஆயினும் இளைஞனான உசியா அரசன் யூத நாட்டின் எல்லையை விரிவாக்கி, எதிர்களை வென்று, எகிப்து வரை தனது புகழ் பரவும் படியான சிறப்பாக ஆட்சி செய்தார்.

எப்படி ஒரு இளைஞனால் ஒரு நாட்டையே வளர்ச்சியின் பாதையில் கொண்டு செல்ல முடிந்தது? வேதம் சொல்கிறது, அவன் தேவனுடைய இரக்கத்திலும் கிருபையிலும் சார்ந்து வாழ்ந்தான். தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாயிருந்த சகரியாவின் நாட்களிலே தேவனைத் தேட மனதிணங்கியிருந்தான். அவன் கர்த்தரைத் தேடின நாட்களில் தேவன் அவன் காரியங்களை வாய்க்கச் செய்தார் (2 நாளா.26:5). உசியா அரசன், தன்னுடைய இளம் வயதில் தனது மக்களை வழிநடத்த தன்னிடத்தில் ஆற்றலில்லையென்பதை அறிந்திருந்து; தேவனை சார்ந்து, அவரைத் தேடி வாழ்ந்த பொழுது அவருடைய காரியங்களை கர்த்தர் வாய்க்கச்செய்தார்.

ஆயினும், உசியா வெற்றியடைந்து பலப்பட்டபோது, அவனுடைய மனதில் மனமேட்டிமை உண்டானது. உசியா ஒன்றுமறியாத இளைஞனாயிருந்தபோது, அவன் தேவன்மீது முற்றிலும் சார்ந்திருந்தான். ஆனால், அவன் பலப்பட்டபோது, தனக்குக் கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம்மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து தூபபீடத்தின் மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான் (2 நாளா.26:16). அந்தப் பெருமை அவனைத் தோல்விக்கு வழிநடத்தியது.

இயேசு லூக்கா 14:11 –ல் “தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்’’. நம்முடைய ஆண்டவருடைய மிகப் பெரிய சுபாவங்களில் ஒன்று எப்படிப்பட்ட பாவியாக இருந்தாலும் அவனை சிநேகிக்கிறவர். ஆனால் அதே வேளையில் பெருமைக்காரனுக்கு கர்த்தர் எப்போதும் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவனுக்கோ கிருபையளிக்கிறார் (யாக்.4:6). உசியா அரசன் தனது வாழ்வில் கர்த்தரை தேடின பொழுது அவருடைய காரியங்கள் எல்லாம் வாய்த்தது. மனமேட்டிமை வந்தபொழுதோ வாழ்வில் தோல்வி. இந்த புதிய மாதத்தில் நுழையும் அன்பு தேவனுடைய பிள்ளையே, மனத்தாழ்மையோடு தேவனை தேடினால், அவர் உங்களுடைய காரியங்களை வாய்க்கச் செய்து, உங்களுடைய எல்லையை விரிவாக்குவார். நாம் பெற்ற அனைத்தும் தேவனுடையது. பெருமை பாராட்ட நம்மிடத்தில் ஒன்றுமே இல்லை. எல்லாம் தேவ கிருபை என்ற எண்ணத்திற்கு வந்தால் வாழ்வில் உயருவது நிச்சயம்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

http://www.vvministry.com/sms_email.html -- தினமும் உங்கள் E mail முகவரிக்கு கர்த்தருடைய செய்தியையும் வேத வசனத்தை உங்கள் மொபைலுக்கு SMS மூலமாகவும் பெற விரும்பினால் கொடுக்கபட்ட LINK-ல் உள்ள படிவத்தை நிரப்பவும்.

0 Response to " இந்த மாத வாக்குத்தத்தம் (01 June 2014) "

Post a Comment