Friday, 9 May 2014
புனித பொலிகார்ப் (கி.பி.69-155) – பாகம் 2
86 வருடம் நண்மை செய்த இயேசுவை எப்படி மறுதளிப்பேன்
கிறிஸ்துவுக்காய் இரத்த சாட்சியாக மரித்த புனித பொலிகார்ப்பின் வாழ்க்கை வரலாற்றின் தொடர்ச்சி...
ரோமப் பேரரசன் மார்க்கூஸ் அவ்ரேலியுஸ் (Marcus Aurelius) ஆட்சியின் ஆறாம் ஆண்டில் ரோம போர்ச்சேவகர்களால் பொலிகார்ப் கைது செய்யப்பட்டார். அன்பின் அப்போஸ்தலனாகிய யோவானின் சீடரல்லவா இந்த பொலிகார்ப். தன்னை கைது செய்ய வந்தவர்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுத்து உபசரித்தார். இதை கண்ட சேவகர்கள் இப்படிப்பட்ட நல்ல மனிதர்களை ஏன் கைது செய்து அழைத்து வர சொல்கிறார்கள் என்று வியந்தனர். இந்த சேவகர்களிடம் தனக்கு ஒரு மணி நேரம் ஜெபிக்க நேரம் தருமாறு பொலிகார்ப் வேண்டிக்கொண்டு ஜெபித்து சபையினரிடம் இருந்து விடைபெற்று ரோமபுரிக்கு சென்றார்.
அந்த நாட்களில் கிறிஸ்துவை வெளியரங்கமாக அறிக்கை செய்பவர்கள் அநேகர் கூடியிருக்கும் மைதானத்தில் மிருகங்களுக்கு இறைக்கப்படுவார்கள். இல்லையேல் தீக்கிரையாக்கப் படுவார்கள். இந்த மைதானத்திற்குள் எண்பத்தாறு வயது நிரம்பிய முதிர் வயதான பொலிகார்ப் அழைத்து செல்லப்படும் போது பரலோகத்தில் இருந்து "திடங்கொண்டு இந்த மனிதர்களோடு விளையாடு" என்ற குரல் கேட்கின்றது. ரோம ஆளுநர் பொலிகார்பிடம் "கிறிஸ்துவை மறுதலித்து ரோமானிய கடவுளை வணங்கி ஜீவனை காத்துகொள்ளுமாறு" வற்புறுத்தினார். கிறிஸ்துவைப் பழித்து பேசினால் விடுதலை என்ற ஆசை வார்த்தைகளுக்கு இவர் இணங்கவில்லை. பொலிகார்பிடம் இருந்து வந்த விசுவாச வார்த்தைகள் "எண்பத்தாறு வருடம் நான் சேவித்து வரும் இயேசு இந்நாள் வரை எனக்கெந்த தீமையையும் செய்யவில்லை. இப்படியிருக்க எப்படி நான் என்னை இரட்சித்த இயேசு இராஜனை மறுதலிக்க முடியும்?" என்று கேட்டார். இதை கேட்டவுடன் அரங்கத்தில் கூடியிருந்த மக்கள் அவரை தீக்கிரையாகும்படி கூக்குரலிட்டனர்.
தீக்கிரையாகி இரத்த சாட்சியாக தான் மரிக்கவேண்டும் என்று ஏற்கனவே சொல்லிருந்தபடியாக இது நடந்தது. தனது கடைசி நேரத்திலும் கிறிஸ்துவை சாட்சியாய் அறிவித்து அந்த மக்கள் மனமாறும்படியாக கதறினார். இறுதியில் அவர் கைகள் கட்டப்பட்டு அவர்மேல் நெருப்பு வைக்கபட்டது. அந்த நெருப்பில் அவர் அவியாமல் அவரது உடல் தங்கம் போல மின்னியது. கொளுந்துவிட்டு எறிந்த தீயின் மத்தியில் தேவனை அவர் துதிப்பதை பார்த்த அநேகர் இயேசுவை மெய்தெய்வமாக ஏற்றுக்கொண்டனர். இதனால் கோபம் கொண்ட ரோம ஆளுநர் ஈட்டியால் அவரை குத்தி கொலை செய்ய சேவகர்களுக்கு கட்டளையிட்டான். இப்படியாக பொலிகார்ப் இரத்த சாட்சியாக மரித்தார்.
இவரது நினைவாக வருடம்தோறும் அவர் இறந்தநாளை கிறிஸ்தவர்கள் நினவுகூர்ந்து வருகின்றனர். பிப்ரவரி 23-ம் நாள் இவரது நினைவு நாள் அனுசரிக்கப்படுகின்றது. இவர் இரத்த சாட்சியாக மரித்தாலும் இன்றளவும் கிறிஸ்தவர்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருகின்றார். நாமும் கிறிஸ்துவுக்காக தைரியத்தோடு ஊழியம் செய்வோம். தேசத்தை சுதந்தரிப்போம்.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
http://www.vvministry.com/sms_email.html --
தினமும் உங்கள் E mail முகவரிக்கு கர்த்தருடைய செய்தியையும் வேத வசனத்தை உங்கள் மொபைலுக்கு SMS மூலமாகவும் பெற விரும்பினால் கொடுக்கபட்ட LINK-ல் உள்ள படிவத்தை நிரப்பவும்.
0 Response to " புனித பொலிகார்ப் (கி.பி.69-155) – பாகம் 2 "
Post a Comment