விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

எதிரியை முறியடித்த கிதியோன்



கிதியோனோடு இருந்த 300 பேரும் 100 பேரடங்கிய மூன்று படைகளாக பிரிக்கப்படுகின்றனர். ஒவ்வொருவருக்கும் ஓர் எக்காளமும் ஒரு பெரிய மண்பானையும் கொடுக்கப்படுகிறது. அந்த மண்பானையில் ஒரு தீப்பந்தம் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. இதுவே கிதியோனுடைய முதல் ஆணை: ‘நான் செய்வதைப் பார்த்து, அப்படியே நீங்களும் செய்யுங்கள். நான் எக்காளம் ஊதும்போது, நீங்களும் எக்காளங்களை ஊதி, கர்த்தர்ருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்பீர்களாக.’ (நியாயாதிபதிகள் 7:16-18, 20). அந்த 300 போர் வீரர்களும் விரோதியினுடைய பாளயத்தின் ஓரம்வரை பதுங்கிச் செல்கிறார்கள். அப்பொழுது இரவு சுமார் பத்து மணி—காவலர் மாறிச் சென்றதற்கு சற்று பிறகு. இதுவே தாக்குவதற்கு ஏற்ற சமயமாக தோன்றுகிறது, ஏனென்றால் மாற்று காவலர்களுடைய கண்கள் இருட்டிற்குப் பழக்கப்படுவதற்கு சற்று நேரமெடுக்கும்.

இப்பொழுது மீதியானியருக்கு எப்பேர்ப்பட்ட திகில் ஏற்படுகிறது! திடீரென 300 மண்பானைகளும் உடைய, 300 எக்காளங்களும் முழங்க, 300 ஆட்களும் ஆரவாரம் செய்ய நிசப்தமான அந்த இரவின் அமைதி குலைகிறது. முக்கியமாக, ‘கர்த்தருடைய பட்டயம், கிதியோனுடைய பட்டயம்’ என்ற சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்து, மீதியானியர் கூக்குரலிட ஆரம்பிக்கிறார்கள். அந்தக் குழப்பத்தில், யார் விரோதி யார் நண்பன் என அவர்களால் அடையாளம் கண்டுபிடிப்பது அசாத்தியமே. விரோதிகள் தங்களுக்குள்ளேயே ஒருவரையொருவர் பட்டயத்தால் வெட்டி சாய்க்கும்படி கடவுள் செய்கையில் அந்த 300 பேரும் தங்களுடைய இடத்திலேயே ஆடாமல் அசையாமல் நிற்கிறார்கள். பாளயத்தில் இருந்தவர்கள் முறியடிக்கப்படுகிறார்கள், தப்பிச்செல்வது தடுக்கப்படுகிறது, மீதமுள்ளோர் பிடிக்கப்படுகிறார்கள். இதனால் மீதியானியருடைய அச்சுறுத்தல் நிரந்தரமாக நீக்கப்படுகிறது. வெகு காலமாக இருந்துவந்த கொடூர ஆக்கிரமிப்பு கடைசியில் ஒரு முடிவுக்கு வருகிறது. (நியாயாதிபதிகள் 7:19-25; 8:10-12, 28)

இந்த வெற்றிக்குப் பின்பும்கூட, கிதியோன் தாழ்மையாகவே நடந்துகொள்கிறார். சண்டைக்கு அழைக்காததால் புண்பட்டதாக உணர்ந்த எப்பிராயீம் மனுஷர் கிதியோனுடன் சண்டை செய்ய வருகிறார்கள்; அப்போது அவர்களுக்கு சாந்தமாகவே பதிலளிக்கிறார். அவருடைய சாந்தமான பதில் எப்பிராயீம் மனுஷருடைய கோபத்தைத் தணித்து அவர்களை அமைதிப்படுத்துகிறது. (நியாயாதிபதிகள் 8:1-3). “மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்” நீதிமொழிகள் 15:1 என்ற வசனம் எவ்வளவு உண்மை பாருங்கள். நாமும் கூட எப்பொழுதும் கோபத்துடனே பிறருக்கு பதில் அளிக்கக் கூடாது என்று வேதம் நமக்கு போதித்துள்ளது. இப்பொழுது கிதியோனை ராஜாவாக ஆகும்படி இஸ்ரவேலர் தூண்டுகிறார்கள். ஆனால் அதற்கு கிதியோன் மறுத்துவிடுகிறார். மீதியானியரை உண்மையிலேயே வென்றது யார் என்பதை அவர் மறந்துவிடவில்லை. “நான் உங்களை ஆளமாட்டேன்; என் குமாரனும் உங்களை ஆளமாட்டான்; கர்த்தரே உங்களை ஆளுவாராக” என்று அவர் கூறுகிறார். நியாயாதிபதிகள் 8:23. ஆயினும் போரில் கொள்ளையிட்ட பொருட்களால் ஓர் ஏபோத்தை உண்டாக்கி, அதை தனது பட்டணத்தில் வைக்கிறார்; ஆனால் இதற்குரிய காரணத்தை வேதத்தில் குறிப்பிடுவதில்லை. இஸ்ரவேலர் எல்லாரும் அந்த ஏபோத்துடன் ‘ஒழுக்கங்கெட்ட உறவுகொள்ள’ ஆரம்பிக்கிறார்கள். அதை வழிபடுகிறார்கள், அது கிதியோனுக்கும் அவருடைய வீட்டாருக்கும்கூட கண்ணியாக அமைந்துவிடுகிறது. இருந்தாலும், முழுக்க முழுக்க விக்கிரக ஆராதனைக்காரராகவே அவர் மாறிவிடுவதில்லை. ஏனென்றால், கர்த்தர் மீது விசுவாசம் வைத்த மனிதராகவே அவரை வேதாகமம் விவரிக்கிறது. (நியாயாதிபதிகள் 8:27; எபிரெயர் 11:32-34)

நமக்குப் பாடங்கள் கிதியோனின் கதை எச்சரிப்பூட்டும் மற்றும் உற்சாகமூட்டும் பாடங்களையும் நமக்குப் புகட்டுகின்றன. நம்முடைய மோசமான நடத்தையின் நிமித்தம் கர்த்தர் நம்மிடமிருந்து அவருடைய ஆவியையும் ஆசீர்வாதத்தையும் நீக்கிவிட்டால், வெட்டுக்கிளிகள் நாசமாக்கிய தேசத்திலே வறுமையில் வாழ்ந்த குடிமக்களைப் போலத்தான் நம்முடைய ஆன்மீக நிலையும் இருக்குமென இது நம்மை எச்சரிக்கிறது. நாம் கொடிய காலங்களில் வாழ்கிறோம், கர்த்தர்வின் ஆசீர்வாதமே “ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்” என்பதை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது. (நீதிமொழிகள் 10:22)

கிதியோனைப் பற்றிய விவரப்பதிவிலிருந்து நாம் உற்சாகத்தைப் பெறலாம்; ஏனென்றால் பலவீனமானவர்கள் அல்லது உதவியற்றவர்கள் போல் தோன்றுகிறவர்களைப் பயன்படுத்தியும்கூட எந்தவொரு அச்சுறுத்தலிலிருந்தும் கர்த்தர் தமது ஜனங்களை விடுவிக்க முடியும். கிதியோனும் அவருடைய 300 ஆட்களும் பெரும்படையான மீதியானியரை வெல்ல முடிந்தது, இது தேவனுடைய எல்லையற்ற வல்லமையை நிரூபிக்கிறது. நாம் நம்பிக்கையிழந்த நிலையில் இருக்கலாம், நம்முடைய விரோதிகள் நம்மைவிட எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதால் நாம் நிராதரவாய் இருப்பது போல் தோன்றலாம். என்றாலும், கிதியோனைப் பற்றிய வேதாகம பதிவு கர்த்தர் மீது நம்பிக்கை வைக்கும்படி நம்மை உற்சாகப்படுத்துகிறது, அவர் மீது நம்பிக்கை வைப்பவர்கள் அனைவரையும் அவர் விடுவித்து காப்பார்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென் விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " எதிரியை முறியடித்த கிதியோன் "

Post a Comment