Friday, 25 April 2014
கிதியோனுடைய பயத்தை நீக்கிய கர்த்தர்
மீதியானியருக்கு பயத்து திராட்சை ஆலையின் மறைவில் கோதுமையை போரடித்த கிதியோனின் அடிமனதில் இருந்த பயம் நீங்கினால் மட்டுமே அவரால் மீதியானியரை எதிர்கொண்டு போரிட முடியும். இப்பொழுது கிதியோன் வெறும் முன்னூறு பேரைக் கொண்டு பெரும் படையை எதிர்கொள்ள வேண்டும். கிதியோன் பயந்து போர்க்களத்திற்கு செல்ல தயங்கினால், நிச்சயமாக அவரோடு இருந்த முன்னூறு பேரும் பயந்து விடுவார்கள். ஆண்டவர் கிதியோனுடைய பயத்தை போக்கும் வன்னமாய் அவரை நோக்கி மீதியானியரும் அமலேக்கியரும் கீழை நாட்டினர் அனைவரும் வெட்டுக்கிளிக் கூட்டம் போல் இருந்த பாளையத்திற்குப் போகும்படி கூறினார். கிதியோன் நிச்சயமாக தனியே செல்ல பயப்படுவார் என தேவன் அறிந்து, உன் ஊழியன் பாரா-வையும் உடன் அழைத்து செல்லும்படி கூறினார். அங்கே காவல் காத்துகொண்டிருக்கும் இரவுக்காவலர்கள் பேசிக் கொள்வதை நீ கேட்டால் உனக்கு ஊக்கம் உண்டாகி, அஞ்சாது அவர்கள் பாளையத்தில் நுழைவாய் என்றார்.
ஆகவே கிதியோனும் அவன் ஊழியன் பாராவும் இரவுக்காவலர்கள் இருந்த பக்கமாய் சென்றார்கள். காவலர்களில் ஒருவன் தான் கண்ட கனவைப் பற்றி இன்னொருவனிடம், "ஒரு கனவு கண்டேன். சுடப்பட்ட ஒரு வாற்கோதுமை அப்பம் மீதியானியர் பாளையத்துக்கு உருண்டு வந்தது. அது கூடாரம் வரை வந்து கூடாரத்தை விழச்செய்து, சமவெளிக்கு உருட்டித் தள்ளி விட்டது" என்றான். அதற்கு மற்றவன், "இது இஸ்ராயேலன் யோவாசின் மகன் கிதியோனின் வாள் அன்றி வேறன்று. மீதியானியரையும் அவர்களது படை முழுவதையும் ஆண்டவர் அவன் கைவசமாக்கினார்" என்றான். கனவையும் அதன் விளக்கத்தையும் கேட்ட கிதியோனுக்கு உள்ளத்தின் ஆழத்தில் இருந்து பயம் நீங்கி புதுத் தைரியம் பிறந்தது. ஆண்டவரை வாழ்த்தினான். பின் இஸ்ராயேல் பாளையத்திற்குத் திரும்பி வந்து, "எழுந்திருங்கள், மீதியானியரின் படையை ஆண்டவர் நம் கைவசமாக்கினார்" என்றான். (நியா 7:9-15). தனக்கும் தன்னுடைய 300 ஆட்களுக்கும் மீதியானியர் மீது கர்த்தர் வெற்றி தருவாரென உறுதியாக நம்பி போரில் இறங்கினார்.
நம்மில் பெரும்பாலோர் ஏதோவொரு சமயத்தில் பயத்திற்கு ஆளாகியிருப்போம் என்பதை மறுக்க முடியாது. சிலருக்கு இருளைக் கண்டால் பயம், சிலருக்கு வியாதியைக் குறித்து பயம், சிலருக்கு எதிர்காலத்தை நினைத்தும் இன்னும் சிலருக்கு கடந்த கால பாவம் மேற்கொள்ளுமா என்ற பயம். ஆபிராகாமை கர்த்தர் அழைத்த பொழுது, “நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார் (ஆதியாகமம் 15:1). இன்றைக்கு நம்மைப் பார்த்தும் அதே வார்த்தைகளை கூறுகின்றார். ஆகவே எதைக் குறித்தும் பயப்படாதிருங்கள். யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப்பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன் (ஏசாயா 43:1). உள்ளத்தில் பயம் நீங்கினால் உலகத்தில் ஜெயம் பெற முடியும் என்பதற்கு கிதியோனுடைய வாழ்க்கை நமக்கு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது. எதிரிகளுக்கு பயந்த நிலையில் வாழ்ந்து வந்த கிதியோனுடைய பயத்தை நீக்கிய கர்த்தர் இன்றைக்கு நமது உள்ளங்களில் இருக்கும் பயத்தையும் அறவே நீக்கும்படியாய் ஜெபியுங்கள். பயம் நீக்கி ஜெயம் பெறுங்கள்.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
0 Response to " கிதியோனுடைய பயத்தை நீக்கிய கர்த்தர் "
Post a Comment