விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

இயேசுவில் நிலைத்திருங்கள்


நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். யோவான் 15: 7.

1935
ம் வருடம் அமெரிக்கா ஐக்கிய தேசத்தில் பிறந்த மோன்டி ராபர்ட்ஸ், 200 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய பந்தய குதிரை காப்பகத்தை நிறுவியுள்ளார். இவருடைய பள்ளி பருவத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் கிறிஸ்தவர்களாகிய நம்மை சிந்திக்க தூண்டுவதாய் அமைந்துள்ளது. மோன்டி ராபர்ட்ஸ் சிறு வயதாக இருந்த பொழுது அவரது தகப்பனார் குதிரைகளுக்கு பயிற்சி அளிப்பவராக இருந்தார். அதினிமித்தம் ஒவ்வொரு ஊருக்கும் சென்று சில காலம் தங்கி பயிற்சி அளிப்பார். இதினால் மோன்டி ராபர்ட்ஸ் பள்ளிக்கு செல்வது பலமுறை தடைபட்டது. ஆனாலும் தந்தையோடு இருந்து அவர் எவ்வாறு குதிரைக்கு பயிற்சி கொடுக்கின்றார் என்று கவனித்துக் கொண்டே இருப்பார். தனது தந்தை எப்படிப்பட்ட கடினமான குதிரைகளுக்கு பயிற்சி கொடுத்தாலும், தந்தையோடு இருந்து அதைப் பார்ப்பார்.

ஒரு நாள் அவருடைய பள்ளியின் ஆசிரியர் மோன்டி ராபர்ட்ஸிடம், அவருடைய எதிர்கால கனவு பற்றி கட்டுரை எழுதி வரச்சொன்னார். தந்தையோடு இருந்து அவர் எவ்வாறு குதிரைக்கு பயிற்சி கொடுக்கின்றார் என்பதை கண்டிருந்த மோன்டி ராபர்ட்ஸ், தன்னுடைய எதிர் காலத்தில் தந்தையைப் போல சிறந்த குதிரைப் பயிற்சியாளராய் வரப்போவதாக எழுதினார். மேலும் சொந்தமாய் பந்தய குதிரை காப்பகத்தை உருவாக்க போவதாகவும் ஏழு பக்கத்திற்கு எழுதி அந்த ஆசிரியரிடம் கொடுத்தார். அதை வாசித்த ஆசிரியர் கோபமடைந்தார். காரணம் பந்தய குதிரையைக் கூட வாங்க உங்கள் குடும்பத்தில் பணம் இல்லை. நீ எப்படி பந்தய குதிரை காப்பகத்தை உருவாக்க முடியும் என்று சொல்லி அந்த கட்டுரைத் தாளை கிறுக்கி அவரிடம் கொடுத்தார். நம்பத்தகுந்த எதிர்கால கனவைப் பற்றியதான கட்டுரையை எழுதி வருமாறு கூறினார். தன் தகப்பனிடம் சென்று நடந்த காரியத்தை கூறி, தான் என்ன செய்ய வேண்டும் என கேட்டார் மோன்டி ராபர்ட்ஸ். தந்தையோ இப்பொழுது நீயே முக்கியமான முடிவை எடுக்க வேண்டும்என்று தெளிவு பட கூறி விட்டார். மீண்டும் பல நாள் கழித்து, கிறுக்கப்பட்ட அதே கட்டுரைத்தாளை அந்த ஆசிரியரிடம் கொடுத்து, தன்னுடைய எதிர் கால கனவில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று கூறிவிட்டார். தன் தகப்பனோடு ஒன்றிணைந்து, தகப்பன் செய்த அதே வேலையில் தானும் சாதித்து காண்பிப்பதாய் உறுதி எடுத்தார். அதன் விளைவாக அமெரிக்க ஐக்கிய தேசத்தில் 200 ஏக்கர் பரப்பளவிலான மிகப்பெரிய பந்தய குதிரை காப்பகத்தை நிறுவியுள்ளார். அந்த காப்பகத்தில் அந்த கட்டுரைத் தாளை இன்றளவும் பாதுகாப்பாய் வைத்துள்ளார்.

உலக மனிதன் அவனுடைய தந்தையோடு நிலைத்திருந்து மிகப்பெரியதாய் சாதிக்க முடியும் என்றால், கிறிஸ்துவை தகப்பனாய் கொண்டுள்ள நாம் அவரில் நிலைத்திருந்தால் வாழ்வில் சாதிப்பது எவ்வளவு நிச்சயம். நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும் என்று இயேசு தெளிவாக கூறியுள்ளார். முதலாவது நாம் இயேசுவிலும், அவருடைய வார்த்தைகள் நம்முடைய வாழ்க்கையிலும் நிலைத்திருக்க வேண்டும். இயேசுவினுடைய போதனைகளின்படி வாழ்வதே அவருடைய வார்த்தையில் நிலைத்திருப்பது ஆகும். இரண்டாவது எதிர்கால தரிசனம் அல்லது நல்வாழ்வுக்காய் ஜெபிக்கும் அனுபவம் வேண்டும். அதை முன்னிறுத்தி தான் நாம் அநேக காரியங்களை ஜெபத்தில் கேட்கின்றோம். மூன்றாவது, பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்” (யோவான் 15: 9) என்று இயேசு கூறியுள்ளதைப் போல நாம் இயேசுவின் அன்பில் நிலைத்திருக்க வேண்டும். பாவம் செய்து அவரை நோகச் செய்தால் நாம் அவருடைய அன்பில் நிலைத்திருக்க முடியாது.

இயேசுவினுடைய வார்த்தையைக் கைக்கொண்டு வாழாமலும், எதிர் கால தரிசனத்துக்கான ஜெபமே இல்லாமலும், இயேசுவின் அன்பிலும் நிலைத்திராமலும் இருந்தால் நாம் கேட்டுக் கொள்கின்ற காரியங்களை நம்மால் பெற்றுக்கொள்ள இயலாது. ஒருவேளை ஒருசில காரியங்களை இயேசுவை நச்சரித்து பெற்றுகொன்டாலும், அந்த காரியங்கள் பிறருக்கு நண்மை பயக்கும் சாதனைகளாய் மாறாது. நாம் நமது எதிர் கால தரிசனத்தில் விலகாதிருந்து, இயேசுவின் அன்பில் நிலைத்திருந்து அவருடைய வார்த்தைகளை கைக்கொண்டு வாழ்ந்தால், நாம் கேட்டுக் கொள்கின்ற காரியங்களை நாம் பெற்றுக்கொள்ளலாம். சோதனை மிகுந்த வாழ்க்கையானது சாதனை நிறைந்ததாக மாறிவிடும்.


கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " இயேசுவில் நிலைத்திருங்கள் "

Post a Comment