ஓய்வு நாளில் இயேசு எருசலேமில் இருந்த பொழுது, ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள். ஆயக்காரன் என்றால் சுங்கம் வாங்குபவன் அல்லது வரி வசூலிப்பவன் என்று பொருள். அன்றைய காலத்தின் ரோம அரசுக்கு வரி வசூலிக்க ஆயக்காரர்கள் நியமிக்கப் பட்டிருந்தார்கள். ஆயக்காரரில் அநேகர் பணத்தை வசூலித்து தங்கள் சொந்த செலவுக்கு பயன் படுத்தியிருக்கலாம். ஆகவே தான் இவர்கள் இயேசுவின் அருகிலிருப்பதைக் கண்ட பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து, இவர்(இயேசு) பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள். அப்போது இயேசு அவர்களுக்கு உவமைகளால் பேசத் தொடங்கினார். இது லூக்கா 15:11-32 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
தந்தையைப் பிரிந்த இளைய மகன்
ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, சொத்தில் என் பங்கை எனக்குத் பிரித்து தரவேண்டும் என்றான். எனவே தகப்பன் அவர்களுக்குத் தன் சொத்தை பங்கிட்டுக் கொடுத்தார். சில நாட்களுக்குப் பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரநாட்டுக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் வாழ்ந்து, தன் சொத்தை எல்லாம் அழித்துப்போட்டான். எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்தத் நாட்டில் கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத் தொடங்கி, அந்த நாட்டின் குடிகளில் ஒருவனிடத்தில் போய் சேர்ந்துக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான். அப்பொழுது பன்றிகள் தின்னும் தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஆனாலும் ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.
மனம் மாறிய மகன், மனமகிழ்ச்சியில் தகப்பன்:
அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் போதுமான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன். நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். இளைய மகன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தார். பன்றிகளை மேய்த்த மகனின் மேலிருந்த துர்நாற்றத்தை பெரிதுபடுத்தாததைக் கண்ட இளைய மகன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான். அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் விருந்துண்டு, சந்தோசமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான் காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோசப்படத் தொடங்கினார்கள்.
பாவத்தை சுட்டிக் காட்டும் மூத்த மகனாகிய சமுதாயம்:
அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு, ஊழியக்காரரில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான். அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்றான்.அப்பொழுது அவன் கோபமடைந்து, வீட்டினுள்ளே போக மனதில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தார். அவன் தகப்பனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, இத்தனை வருடகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கட்டளையை மீறாதிருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை. விபச்சாரிகளிடத்தில் உம்முடைய சொத்தை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான். “விபச்சாரிகளிடத்தில் உம்முடைய சொத்தை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன்” என்று இளைய மகன் செய்த பாவத்தை கோடிட்டு காட்டுகின்றார் மூத்த மகன். நாம் வாழுகின்ற சமுதாயமும், நமது உற்றார் உறவினர்கள், சகோதர சகோதரிகள் கூட நாம் செய்த பாவத்தை சுட்டி காட்டி நம்மை கடிந்து பேசலாம். ஆனால் தகப்பனோ தனது மூத்த மகனிடம், “மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது. உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான் காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாய் இருக்கவேண்டாமோ” என்று சொன்னார். இயேசு மறை முகமாக நானே அந்த நல்ல தகப்பன் என்று தங்களை பரிசுத்தவான்களாய் எண்ணிய பரிசேயரர் மற்றும் வேதபாரகரிடம் கூறினார்.
பாவத்திற்கு விலகி தகப்பனிடம் திரும்புங்கள்:
புத்திக்கு எட்டாத இந்த அன்பைப் பாருங்கள். இந்த அன்பை நாம் உணராமல் அநேக சந்தர்ப்பங்களில் பாவம் செய்து தகப்பனை விட்டு தூரமாய் சென்று விடுகின்றோம். ஆனால் நல்ல தகப்பன் இயேசு, நாம் எப்பொழுது பாவத்தை விட்டு அவரிடம் திரும்புவோம் என்று எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றார். கெட்ட குமாரன் தனது பாவத்தில் திளைத்து, வேசித்தனத்தில் புரண்டு கொண்டிருக்கும் வேளையில் தந்தை அவனை அரவணைக்கவில்லை. வேதம் சொல்கிறது அவன் எழுந்து புறப்பட்டு தனது தகப்பனிடத்தில் வந்தான் என்று. பாவத்தில் உழன்று கொண்டிருக்கும் தனது நண்பர்களை அவன் கைகழுவிவிட்டு வந்தான். தனது பழைய வாழ்க்கையாடு தொடர்புடைய அனைத்தையும் அவன் உதறித்தள்ளிவிட்டு வந்தான். கருணையே உருவான, நீதியின் தந்தை இயேசு அவனை ஏற்றுக்கொண்டது போல நம்மையும் ஏற்றுக் கொள்வார். இந்த வாசிக்கின்ற நீங்கள், இன்னும் பாவமென்னும் பன்றிக் குடிலிலேயே இருக்கின்றீர்களா?. குடிப்பழக்கத்திற்கோ, புகைப்பழக்கத்திற்கோ அல்லது வேறெதாவது போதைப் பழக்கத்திற்கோ அடிமையாக உள்ளீர்களா?. பெண்களுடன் தவறான உறவிலோ, அல்லது தொலைக்காட்சியில் பார்க்கக்கூடாத படங்களை பார்த்துச் சுவைத்துக் கொண்டோ இருக்கின்றீர்களா?. உங்களுடைய வருகையை எதிர்பார்த்து இயேசு உங்களுக்காய் காத்துக் கொண்டிருக்கின்றார். நம்முடைய பாவங்களுக்காய் சிலுவையில் இரத்தம் சிந்தி நம்மை மீட்டுள்ளார். அந்த புனித இரத்தம் நிச்சயம் நமது பாவங்களை கழுவி நம்மை சுத்திகரிக்கும்.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
0 Response to " தகப்பனிடம் திரும்புங்கள் "
Post a Comment