விசுவாசத்தில் நிலைத்திருங்கள். அப் 14:22
யுனிவர்சிட்டி
ஆப் கலிபோர்னியா பல்கலைகழகத்தில் கடவுள் இல்லை என்று தீர்க்கமாக சொல்லும் ஒரு நாத்திகவாதி
இருந்தார். இருபது வருடங்களாக தத்துவவியல் (philosophy)
துறையில் ஆசிரியராக பணிசெய்தார். ஒவ்வொரு வருடத்தில் சேரும் 300 மாணவர்களுக்கும்
கடவுள் இல்லவே இல்லை என போதிப்பார். பல அறிவியல் கண்டுபிடிப்புகளை சொல்லி அவற்றின்
நன்மைகளை விவரிப்பார். ஆகவே அவரிடத்தில் தர்க்கம் செய்யவே மாணவர்கள்
பயப்படுவார்கள். அப்படியே யாராவது தர்க்கம் செய்தாலும் அவரை வெல்ல முடியாது.
ஒவ்வொரு செமஸ்டரின் கடைசிநாள் வகுப்பிலும் தனது கையில் இருக்கும் சாக்பீஸ் கட்டியை
தரையில் போடுவார். கடவுள் என்று ஒருவர் உண்மையிலே இருந்தால் இந்த சாக்பீஸ் கட்டியை உடையாமல் பாதுக்காகட்டும். அப்பொழுது கடவுள்
இருக்கின்றார் என்று ஏற்றுகொள்ளுவேன் என்று சொல்லி சாக்பீஸ் கட்டியை தரையில்
போடுவார். சாக்பீஸ் கட்டி தரையில் விழுந்து நொறுங்கியவுடன், இந்த
சிறு காரியத்தையே செய்ய முடியாதவர் நிச்சயமாக கடவுளாக இருக்க முடியாது என்று
தீர்க்கமாக மாணவர்களுக்கு சொல்லுவார். இன்னும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்
யாராவது இருக்கின்றீர்களா? என்று கேட்பார். கடந்த இருபது
வருடத்தில் எவருமே எழுந்து நின்றது இல்லை. அநேக கிறிஸ்துவ மாணவர்களும் அவருடைய
தத்துவ போதனையால் தங்கள் விசுவாசத்தை விடுத்து நாஸ்திகர்களாக மாறினர்.
கிறிஸ்துவை
தீவிரமாய் பின்பற்றிய வாலிபன் ஒருவன் அந்த கல்லூரியில் சேர்ந்தான். அந்த நாஸ்திக ஆசீரியரைக்
குறித்து அநேக காரியங்களை சக மாணவர்கள் சொல்லவே திகைப்படைந்தான். அந்த ஆசிரியரின்
துறைக்கு செல்லக்கூடாது என இயேசுவிடம் பிரார்த்தனை செய்தான். ஆனால் அவனது
படிப்பிற்கு தத்துவவியல் அவசியமானதால் அந்த ஆசிரியரின் வகுப்பில்
சேர்க்கப்பட்டான். ஓவ்வொரு நாள் அந்த நாஸ்தீக ஆசிரியரின் வகுப்பிற்கு செல்லும்
பொழுதும் தன்னுடைய கிறிஸ்துவ விசுவாசம் சோதிக்கப்படக் கூடாது என பிரார்த்தனை
செய்தான். மேலும் அந்த ஆசிரியர் சாக்பீஸ் கட்டியை தரையில் போட்டால் அது உடையக்
கூடாது எனவும் பிரார்த்தனை செய்து வந்தான். செமஸ்டரின் இறுதி நாள் வந்தது. நாஸ்தீக ஆசிரியர் வழக்கம் போல, இன்னும் கடவுள்
நம்பிக்கை உள்ளவர்கள் யாராவது இருக்கின்றீர்களா? என்று கேட்பார்.
பின் வரிசையில் எழுந்து நின்றான் கிறிஸ்துவை தீவிரமாய் பின்பற்றிய வாலிபன். அந்த
வகுப்பில் இருந்த முன்னூறு மாணவர்களும் அவனைத் திகைப்புடன் பார்த்தனர். இருபது
வருடமாய் எவரும் எழுந்து நிற்காத நிலையில் இந்த வாலிபன் எழுந்து நிற்பதைக் கண்டு
கடுங்கோபமடைந்தார் நாஸ்தீக ஆசிரியர். அவர் அந்த வாலிபனை நோக்கி, “முட்டாளே கடவுள் இல்லை என்பதை எத்தனை தெளிவாய் நான் கற்றுக் கொடுத்தேன். இப்பொழுதும்
கடவுள் இல்லை என்பதை உனக்கு நிரூபித்து காட்டுகிறேன் என்று சொல்லி சாக்பீஸ் கட்டியை
எடுத்தார். இந்த சாக்பீஸ் கட்டி உடையவில்லை என்றால் கடவுள் இருக்கின்றார் என
நம்புகிறேன் என்று சொல்லி கரங்களை உயர்த்தினார். கைகளில் இருந்து சாக்பீஸ் தவறவே அவர்
அணிந்திருந்த சட்டையில் பட்டு அவர் அணிந்திருந்த சூ-வில் விழுந்து பின்னர் தரையில்
விழுந்தது. ஆனால் சாக்பீஸ் கட்டி உடையாமல் தரையில் உருண்டு ஓடியது. திகைப்புடன்
அந்த சாக்பீஸ் கட்டியை பார்த்துகொண்டிருந்த அந்த நாஸ்திக ஆசீரியர் தான் கடவுளால்
தோற்கடிக்கப்பட்டதை உணர்ந்தார். கடவுள் இருப்பதை ஒத்துக்கொண்டு வகுப்பை விட்டு
கடந்து சென்றார். வகுப்பின் பின்னால் நின்று கொண்டிருந்த மாணவன் முன்பதாக வந்து,
கிறிஸ்துவின் மீது உள்ள தனது விசுவாசத்தை சாட்சியாக அரைமணி நேரம் கூறினான்.
முன்னூறு மாணவர்களும் தேவனுடைய அன்பையும், கிறிஸ்துவின்
வல்லமையையும் அன்றைய தினம் அறிந்து கொண்டார்கள்.
அப்போஸ்தலராகிய
பவுல், “சீஷருடைய
மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே
நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப்
புத்திசொல்லி, நாம்
அநேக உபத்திரவங்களின்
வழியாய் தேவனுடைய
ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று
சொல்லி (அப் 14 :22)
சபையை திடப்படுத்தினார். எந்த வித போராட்டம் வந்தாலும்
கிறிஸ்துவைப் பற்றும விசுவாசத்தில் நிலைத்திருக்கும்படி அறிவுறுத்தினார். ஆதிச்
திருச்சபை பல இன்னல்களுக்கு உள்ளதாய் சென்றாலும் அவர்கள் கிறிஸ்துவைப் பற்றும்
விசுவாசத்தில் நிலைத்து நின்றார்கள். இந்தியாவிலும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தியாவில் கிறிஸ்துவர்களுக்கு எதிராய் அநேக அநீதிகள் இழைக்கப்படும் வேளையில், கிறிஸ்துவுக்கு எதிரானவர்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக சபைகள்
துன்புறுத்தப்படும். அது போன்ற சூழ்நிலை வந்தால் கிறிஸ்துவைப் பற்றும்
விசுவாசத்திலும் அவருடைய அன்பிலும் நிலைத்து நிற்பீர்களா? நாம்
அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று என்பதை
நினைவில் கொள்ளுங்கள். இயேசு தன்னை சூழ்ந்து நின்ற திரள் ஜனங்களுக்கு போதிக்கையில், “நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள்
பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம்
அவர்களுடையது. என்னிமித்தம்
உங்களை நிந்தித்துத்
துன்பப்படுத்தி, பலவித
தீமையான மொழிகளையும்
உங்கள்பேரில் பொய்யாய்ச்
சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்”
(மத்தேயு 5: 10-11)
என்று விசுவாசத்தில் நிலைத்து நிற்பதினால் வரும் பாடுகளை சகிப்பவர்கள் வின்னரசில்
மேன்மையான நிலையில் இருப்பார்கள் என்றும் அவர் பேரு பெற்றவர்கள் என்றும்
கூறியுள்ளார். வாழ்வில் எவ்வித போராட்டம் வந்திடினும்
கிறிஸ்துவின் அன்பில் நிலைத்து நிற்போம். பரலோகத்தில் மேன்மையைக் காண்போம்.
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
0 Response to " விசுவாசத்தில் நிலைத்திருங்கள் "
Post a Comment