
Tuesday, 10 June 2014
கர்த்தரே நமக்கு முன்பாக போகிறவர் (10 June 2014)
கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார். ஏசாயா 52: 1
கர்த்தரே நமக்கு முன்பாக போகிறவர். தேவ ஜனங்களாக ஆட்டுமந்தையை நடத்தி செல்லும் நல்ல மேய்ப்பன், பிரதான மேய்ப்பன் அவர். அநேக வேளையில் மாநகரங்களில் அரசியல் தலைவர்கள் செல்லும்போது அனைத்து வாகனங்கள் போவது நிறுத்தப்பட்டு தலைவர்களின் வாகனங்கள் முன்னும், பின்னும் விலையேறப்பெற்ற பாதுகாவலர்களின் பாதுகாப்புடன் செல்லும். அதுபோல தான் நம்முடைய தேவன் தம்முடைய ஜனங்களுக்கு முன்பாக செல்லுவார். முழு இஸ்ரவேல் ஜனங்களை தேவன் அப்படித்தான் நடத்தி சென்றார். தம் தாசனாகிய மேசேயை பார்த்து என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும். நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் (யாத் 34 : 14) என்றார். யோசுவாவுக்கு தேவன் தந்த தீர்க்கதரிசன வார்த்தைகளை அவர் அப்படியே நிறைவேற்றினார்.
இதோ, சர்வபூமிக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய உடன்படிக்கைப் பெட்டி உங்களுக்கு முன்னே யோர்தானிலே போகிறது. (யோசுவா 3 : 11) யோர்தான் நதி தேவ ஜனங்களுக்கு குறுக்காக இருந்தபோது தேவனுடைய மகிமை விளங்கும் உடன்படிக்கைபெட்டி அதாவது தேவனே முன்பாக கடந்துசெல்கிறார். யோர்தானில் வெள்ளம் இருபுறமும் குவியலாய் நின்றது. தேவஜனங்கள் உலர்ந்த தரைவழியாக கடந்து போகிறார்கள். அடுத்ததாக எரிகோ கோட்டை முன்பாக யோசுவாவும் தேவ ஜனங்களும் நிற்கிறார்கள். எரிகோவை பிடிக்க முடியாதபடி வாக்குத்தத்த கானான் தேசத்தில் நுழையவிடாதபடி கோட்டை நிற்பதை கண்டார்கள். எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது. ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை. (யோசுவா 6 :1) ஆனால் அங்கும் தேவன் சொல்லியபடி அந்தப்படியே நூனின் குமாரனாகிய யோசுவா ஆசாரியரை அழைத்து: உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு போங்கள். (யோசு 6 : 6) தேவனுடைய மகிமை முன்பாக சென்றது. எக்காளங்களை ஊதுகையில் ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள். எக்காள சத்தத்தை ஜனங்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடே முழங்குகையில், அலங்கம் இடிந்துவிழுந்தது. (யோசு 6 : 20)
எனக்கன்பானவர்களே, உங்கள் வாழ்க்கையிலும் கர்த்தர் தாமே உங்களுக்கு முன்பாக செல்வார். இதை வாசிக்கும்போதே உங்கள் முன்பாக காணப்படும் யோர்தான் நதிகள், எரிகோ கோட்டைகளை உடைத்து தேவன்தாமே வழிகளை உண்டுபண்ணுவார். உங்களை நடத்திச் செல்வார்.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக.
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
0 Response to " கர்த்தரே நமக்கு முன்பாக போகிறவர் (10 June 2014) "
Post a Comment