விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

யெகோவா ரஃபா – பரிகாரியாகிய குணமாக்கும் கர்த்தர்



நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார் (யாத்.15:26).

திருச்சபையானது விசுவாசிகளின் காட்சிசாலையல்ல, மாறாக பாவிகளின் மருத்துவமனையே. நாம் கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது, அவர் நம்முடைய குணமாகும் சிறந்த மருத்துவராகிறார். நாம் ஒரு திருச்சபையின் அங்கமாகும்போது, தேவனுடைய மருத்துவமனைக்குள் நோயாளியாகச் செல்லுவது போலாகிறது. குணமாக்குதல் இரண்டு விதங்களில் நமக்கு தேவைப்படுகின்றது. ஒன்று உடலில் குணமாதல். இரண்டு உள்ளத்தில் குணமாதல். உடலைத் தாக்குவது நோய். உள்ளத்தை தாக்குவது கவலை. இந்த இரண்டிலிருந்தும் மனிதர்களை குணமாக்கும் பணியை இயேசு சிறப்பாக செய்து வருகின்றார்.

இஸ்ரவேல் புத்திரர் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டபின், வெகு சீக்கிரத்திலேயே அவர்கள் தேவனைப் பரிகாரியாகிய கர்த்தராக அறிந்துகொண்டார்கள். அவர்கள் எகிப்தில் நானூறு ஆண்டுகள் அடிமைகளாயிருந்தார்கள்; தேவனுடைய வேளை வந்தபோது, அவருடைய வல்லமையினால் அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டார்கள். செங்கடலைக் கடந்தபின், மூன்று நாட்களாக சூர் என்ற பாலைநிலத்தில் பயணம் செய்தனர். சுட்டெரிக்கும் வெயிலில் தண்ணீரை எதிர்பார்த்து நடந்து சென்ற பொழுது மாரா என்ற தண்ணீருள்ள ஒரு இடத்திற்கு வந்தார்கள். தாகத்தோடு பாலைநிலத்திலிருந்து வந்து திரளான மக்கள் ஆவலுடன் தண்ணீரை பருக தொடங்கினர். ஆனால், அந்தத் தண்ணீரோ கசப்பாயிருந்தது. மக்கள் மோசேவுக்கு எதிராக முறுமுறுத்தனர். மோசே ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பினார். ஆண்டவர் அவருக்கு ஒரு மரத்துண்டைக் காட்டினார். அதை அவர் தண்ணீரில் எறிய, தண்ணீரும் சுவைபெற்றது. அங்கே சட்டங்களையும் ஒழுங்குகளையும் தந்து ஆண்டவர் அவர்களைச் சோதித்தார். ஆண்டவர் அந்தத் தண்ணீரைத் தித்திப்பாக்கியபின், இஸ்ரவேல் புத்திரர் ஆரோக்கியம் அனுபவிக்க மூன்று நிபந்தனைகள் கொடுத்தார். முதலாவது, கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்கவேண்டும்; இரண்டாவது, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்யவேண்டும். இறுதியாக, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொள்ளவேண்டும். அந்த நிபந்தனைகளை நிறைவேற்றினால்தான் தேவனைத் தங்கள் குணமாக்கும் மருத்துவராக யெகோவா ரஃபா – வாக அனுபவிக்கமுடியும்.

பிரியமானவர்களே, நமது வாழ்க்கையும் நீர் தேடி அலையும் பாலைவனம் போன்றது தான். மாராவின் தண்ணீரைப் போன்று கசப்பான அனுபவங்கள் உங்களுடைய வாழ்வில் உள்ளதா. கவலை வேண்டாம். நமக்கும் ஒரு மரத்துண்டு உள்ளது. சிலுவையில் இயேசு நமது நோய்களையும், பாவ சாபங்களையும் சுமந்து தீர்த்து விட்டார். உங்கள் வாழ்வின் கசப்பான காரியங்களை சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் மீது போட்டு விடுங்கள். அவர் உங்கள் வாழ்வின் கசப்பான அனுபவங்களை மதுரமாக மாற்றுவார். தம்முடைய பிள்ளைகளின் நோய்களைக் குணமாக்குகிறவராக யெகோவா ரஃபா – வாக தேவன் தம்மை வெளிப்படுத்தியிருகின்றார். அவர் குனம்மாக்குகிறவர் மட்டுமல்ல, நம்முடைய ஜெபத்தைக் கேட்கிறவரும் அவரே. இயேசு உங்கள் கண்ணீரைக் கண்டு இருகின்றார், உங்கள் நோயை குணமாக்குவார். எந்த வித கசப்பான சூழ்நிலையும் மதுரமாய் மாற்றும் மரத்துண்டாய் சிலுவை நாதர் நமக்கு இருகின்றார். இயேசு உங்கள் வாழ்வின் கசப்புகளெல்லாம் களிப்பாய் மாற்றுவாராக.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென் விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " யெகோவா ரஃபா – பரிகாரியாகிய குணமாக்கும் கர்த்தர் "

Post a Comment