விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

யெகோவா நிசி



நமது வெற்றிக் கொடியாகிய கர்த்தர்

யோசுவா அமலேக்கையும் அவன் ஜனங்களையும் பட்டயக்கருக்கினாலே முறிய அடித்தான். மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா நிசி என்று பேரிட்டு, அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாயிருந்தபடியால், தலைமுறை தலைமுறை தோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தருடைய யுத்தம் நடக்கும் என்றான் (யாத். 17:13,15-16).

ஈசாக்கின் மூத்த மகனான ஏசாவின் பேரன் தான் அமலேக். இந்த அமலேக்கின் சந்ததியார்தான் அமலேக்கியர் என்று அழைக்கப்பட்டனர். அமலேக்கியர் என்பதற்கு சமவெளியின் குடிகள் என்று பொருள். ஈசாக்கின் இளைய மகனாகிய யாக்கோபு தனது அண்ணன் ஏசாவை ஏமாற்றி ஆசீர்வாதங்களை பெற்றுகொண்டதால், ஏசாவின் சந்ததியாகிய அமலேக்கியர், ஈசாக்கின் சந்ததியாகிய இஸ்ரயேலரை வெறுத்தனர். மோசேவின் தலைமையில் எகிப்தின் அடிமைத் தனத்திலிருந்து இஸ்ரயேலரை தேவன் விடுவித்து கடலின் நடுவாகவும், வனாந்திர பாதையிலும் நடத்தி சென்றார். இஸ்ரயேல் மக்கள் அனைவரும் ஆண்டவர் குறித்த ஒழுங்கின்படி சீன் பாலை நிலத்திலிருந்து பயணத்தைத் தொடர்ந்தனர். அவர்கள் ரெவிதீம் என்ற இடத்திற்கு வந்தார்கள். அதை கேள்விப்பட்ட ஏசாவின் மரபினரான அமலேக்கியர் இஸ்ரயேலரை எதிர்த்துப் போரிட வந்தனர்.

மோசே யோசுவாவை நோக்கி, நம் சார்பில் தேவையான ஆள்களைத் தேர்ந்தெடு. நாளை நீ போய், அமலேக்கியரை எதிர்த்துப் போரிடு. நான் கடவுளின் கோலைக் கையில் பிடித்தவாறு குன்றின் உச்சியில் நின்று கொள்வேன்'' என்றார். அமலேக்கியரை எதிர்த்துப் போரிட மோசே கூறியவாறு யோசுவா செய்யவே, மோசே, ஆரோன், கூர் என்பவர்கள் குன்றின் உச்சிக்கு ஏறிச் சென்றனர். மோசே தம் கையை உயர்த்தியிருக்கும் போதெல்லாம் இஸ்ரயேலர் வெற்றியடைந்தனர்; அவர் தம் கையைத் தளர விட்டபோதெல்லாம் அமலேக்கியர் வெற்றியடைந்தனர். மோசேயின் கைகள் தளர்ந்து போயின. அப்போது அவர்கள் கல்லொன்றை அவருக்குப் பின்புறமாக வைக்க, அவர் அதன்மேல் அமர்ந்தார். அவர் கைகளை ஆரோன் ஒருபக்கமும், கூர் மறுபக்கமுமாகத் தாங்கிக் கொண்டனர். இவ்வாறாக அவர் கைகள் கதிரவன் மறையும்வரை ஒரே நிலையில் இருந்தன. யோசுவா அமலேக்கையும் அவனுடைய மக்களையும் வாளுக்கிரையாக்கி முறியடித்தார்.

அந்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு மோசே பலிபீடத்தைக் கட்டி அதற்கு யெகோவாநிசி என்று பேரிட்டான். அன்பர்களே, வெற்றி கிடைக்க வேண்டுமென்றால் முதலாவது மலையின் உச்சிக்கு செல்ல வேண்டும். அதாவது உலக வாழ்வை விட்டு தேவனின் சமூகத்துக்கு செல்ல வேண்டும். இரண்டாவது மோசே கைகளை உயர்த்தியது எதைக் குறிகின்றதென்றால் நாம் ஆராதனை வீரர்களாக வாழ வேண்டுமென்பதை குறிகின்றது. துதியும் ஆராதனையும் இல்லையென்றால் வெற்றி பெறுவது கடினமே. மூன்றாவதாக கதிரவன் மறையும் வரை மோசேயின் கைகள் உயர்ந்து இருந்தன. இது எதைக் குறிக்கிறது என்றால் வெற்றி கிடைக்கும் வரை நாம் உறுதியான மனதோடு இயேசுவை நோக்கி ஜெபிக்க வேண்டும். நமது தேவன் யெகோவா நிசி, ஜெயக் கொடியாக நமது பாளையத்தில் பறந்து கொண்டிருகின்றார். கர்த்தர் நம் பட்சத்தில் இருக்கும்போது நாம் தோல்வியைக் கண்டு கலங்கத் தேவையில்லை. ஆகையால் மனம் கலங்காமல் யெகோவா நிசியையே நோக்கிப் பார்ப்போம். வெற்றி நிச்சயம்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென் விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " யெகோவா நிசி "

Post a Comment