விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

போராட்டத்திற்குப்பின் புதுப்பாடல்

அப்பொழுது இஸ்ரவேலர் பாடின பாட்டாவது: ஊற்றுத் தண்ணீரே, பொங்கிவா; அதைக்குறித்துப் பாடுவோம் வாருங்கள். எண்ணாகமம் 21:17.

கர்த்தரின் அதிசய கரம்:

எகிப்தின் அடிமைத்தன வாழ்க்கையிலிருந்து கர்த்தரால் விடுதலை பெற்ற இஸ்ரயேல் ஜனங்கள் வனாந்திரத்தின் வழியாய் கானான் தேசம் நோக்கி நடந்து சென்றார்கள். கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார். பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்கினிஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லையாத் 13:21-22. கர்த்தருடைய மேகம் வனாந்திரத்தில் ஜனங்களுக்கு முன்பாக செல்லும் பொழுது, பாலைவன வனாந்திரத்தில் இருக்கும் கொடிய விஷமுள்ள பாம்புகள் மற்றும் மிருகங்கள் அந்த இடத்தை விட்டு விலகி இருக்கும். செங்கடலே விலகி வழிவிட்டது என்றால் சிறிய விஷபூச்சிகள் எம்மாத்திரம்.

முறுமுறுப்பினால் விலகிய பாதுகாப்பின் கரம்:
இப்படிப்பட்ட பயங்கரமான அற்ப்புத அடையாளங்களை கண்ட ஜனங்களுக்கு வனாந்திரத்தில் ருசியான உணவு கிடைக்கவில்லை. அப்பொழுது ஜனங்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாகப் பேசி: நாங்கள் வனாந்தரத்திலே சாகும்படி நீங்கள் எங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணினதென்ன? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை; இந்த அற்பமான உணவு எங்கள் மனதுக்கு வெறுப்பாயிருக்கிறது என்றார்கள். அப்பொழுது கர்த்தர் கொள்ளிவாய்ச்சர்ப்பங்களை ஜனங்களுக்குள்ளே அனுப்பினார்எண்ணாகமம் 21:5-6. வனாந்திரத்தில் இஸ்ரயேல் ஜனங்கள் ருசியான உணவை விரும்பியது போலவே, அங்கிருந்த விஷம் மிகுந்த பாம்புகளுக்கும் ருசியான உணவு தேவைப்பட்டது. ஆனால் கர்த்தருடைய பாதுகாப்பின் கரம் அந்த கொடிய பாம்புகளை கூடாரத்தை நெருங்க விடாமல் பாதுகாத்தது. ஜனங்கள் முறுமுறுத்த பொழுது கர்த்தர் தமது பாதுகாப்பின் கரத்தை அவர்களை விட்டு அகற்றினார்.

விஷம் மிகுந்த பாம்புகள் கூடாரங்களில் புகுந்து அநேக ஜனங்களைக் கடித்ததினால் இஸ்ரவேலருக்குள்ளே அநேக ஜனங்கள் செத்தார்கள். அதினால் ஜனங்கள் மோசேயினிடத்தில் போய்: நாங்கள் கர்த்தருக்கும் உமக்கும் விரோதமாய்ப் பேசினதினால் பாவஞ்செய்தோம்; சர்ப்பங்கள் எங்களைவிட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றார்கள்; மோசே ஜனங்களுக்காக விண்ணப்பம் பண்ணினான். கர்த்தர் அவர்கள் மேல் மனதுருகி அந்த பாம்பின் கடியிலிருந்து விடுதலை பெரும் வழியை கூறினார்.  அப்படியே மோசே ஒரு வெண்கலச் சர்ப்பத்தை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான்;சர்ப்பம் ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலச் சர்ப்பத்தை நோக்கிப்பார்த்துப் பிழைப்பான். எண்ணாகமம் 21:6-9

போராட்டத்திற்குப்பின் புதுப்பாடல்
முறுமுறுபினால் பல இன்னல்களுக்கும் போராட்டங்களுக்கும் நேராய் கடந்து சென்ற இஸ்ரயேல் மக்கள் நான்கு இடங்களில் தங்கிய பின்னர் பேயேர் என்ற இடத்திற்கு வந்தனர். ஜனங்களைக் கூடிவரச்செய், அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன் என்று கர்த்தர் மோசேக்குச் சொன்ன ஊற்று இருக்கிற இடம் அதுதான்”. எண்ணாகமம் 21:16. அந்த இடத்தில் கிணறு வெட்டினார்கள். நல்ல ருசியுள்ள தண்ணீர் வந்ததினால், “ஊற்றுத் தண்ணீரே, பொங்கிவாஎன்று பாடினார்கள். வனாந்திரத்தில் இஸ்ரவேல் ஜனங்களைக் கடிக்கும்படி தேவன் விஷம் மிகுந்த பாம்புகளை அனுப்பினார். ஏனெனில் இதன் மூலம்தான் தேவன் அவர்களை மனந்திரும்பும்படிச் செய்து, தான் அவர்களுக்கு வைத்திருக்கும் ஆசிர்வாதமான நீரூற்றை சுதந்தரிக்கும்படி அப்படி செய்தார்.

பொல்லாத சத்துருவும் கூட நமது வாழ்கையில் நுழைய ஆவலோடு காத்திருப்பான். கர்த்தருடைய சமூகம் நமக்கு முன் சென்றால் எந்த சத்துருவும் நம் வாழ்வினுள் நுழைய முடியாது. நாம் கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்கையில் அல்லது அவருக்கு பிரியமில்லாத வகையில் வாழும் பொழுது கர்த்தருடைய பாதுகாப்பின் கரம் நம்மை விட்டு விலகி, மாறாக அவருடைய கோபத்தின் கரம் நமக்கு நேராய் கடந்து வருகின்றது. அவர் நமக்கு வைத்திருக்கும் ஆசிர்வாதமான நீரூற்றை நாம் சுதந்தரிக்கும்படி அப்படி செய்கின்றார். தேவன் சிட்சிக்கிற மனிதன் பாக்கியவான் என்று வேதம் கூறுகின்றது. தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச்சிட்சிக்கிறார்” (நீதிமொழிகள் 3:12). நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ? (எபிரேயர்12:7). என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே”(நீதிமொழிகள் 3:11).

உங்களுடைய வாழ்க்கையிலோ சரீரத்திலோ பிரச்சனை என்று கதறி, கண்ணீர் விடுகின்றீர்களா? ஒரு வேளை நீங்கள் கர்த்தருடைய வழிகளில் இருந்து மாறி போயிருந்தால், அவரிடத்தில் திரும்பும்படியாகவே கர்த்தர் அனுமதித்தார் என்று நினைத்து கர்த்தரிடத்தில் திரும்புங்கள். போராட்டங்கள் மாறி ஆனந்த புதுப் பாடலகள் பிறக்கும்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " போராட்டத்திற்குப்பின் புதுப்பாடல் "

Post a Comment