விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

அரசர். யோசியா – பாகம் 1

யோசியா இஸ்ரவேல் தேசத்தை சுத்திகரித்தல்

யூதாவின் மிகச்சிறந்த அரசர்களுள் ஒருவராக கருதப்பட்ட யோசியா தனது 8-ம் வயதில் அரசராக பொறுப்பேற்று 31 வருடம் (கி.மு -640 முதல் 609 வரை) யூதேயா தேசத்தில் சிறப்பான முறையில் ஆட்சி செய்தார். யோசியா என்ற பெயருக்கு அர்த்தம் யெகொவா துணை நிற்கிறார் என்பதாகும். யோசியா ராஜா எட்டு வயதிலிருந்தே கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். (II நாளாகமம் 34:2). தனது 16-ம் வயதிலே தேவனை முழு இருதயத்தோடு தேட ஆரம்பித்தார்.தாவீது அரசனுக்கு பிறகு தோன்றிய பல அரசர்கள் தேவனுக்கு பிரியமான வழியில் நடப்பதை விட்டுவிட்டு விக்கிரகங்களுக்கு கோயில்களையும் பலிபீடங்களையும் ஏற்படுத்தினர். அதிலே முக்கியமானவர்களாக யோசியாவின் தாத்தாவாகிய மனாசே அரசனும், யோசியாவின் தந்தையாகிய ஆமோன் என்ற அரசனும் இருந்தனர். மனாசே 55-வருடமும் ஆமோன் 2-வருடமும் பொல்லாத வழியில் நடந்து, கானானிய மக்களின் கடவுளாகிய பகாலுக்கு பல பலிபீடங்களை எடுபித்து கட்டியிருந்தனர்.

யோசியா ராஜா பிறப்பதற்கு சுமார் 300 வருடங்களுக்கு முன்பே அவரை குறித்து கர்த்தர் உரைத்ததாகிய பலிபீடமே பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்; மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார்என்ற தீர்க்கதரிசனத்தை I இராஜாக்கள் 13:2-ல் வாசிகின்றோம். அதாவது யோசியா ராஜாவுக்கு கர்த்தர் நியமித்திருந்த மிக முக்கியமான பணி அந்நிய தெய்வங்களின் பலிபீடங்களை இடித்து தேசத்தை சுத்திகரித்து பரிசுத்தப்படுத்துவதே.

16 – வயது வரை தேவனை முழு இருதயத்தோடு தேடிய யோசியா ராஜா, தனது 18-ம் வயதிலே கர்த்தர் தனக்கு நியமித்திருந்த திருப்பணியாகிய, “மேடைகள் தோப்புகள் சுரூபங்கள் விக்கிரகங்களாகிய இவைகள் அற்றுப்போகும்படி, யூதாவையும் எருசலேமையும் சுத்திகரிக்கத் தொடங்கினான். அவனுக்கு முன்பாகப் பாகால்களின் பலிபீடங்களை இடித்தார்கள்; அவைகளின் மேலிருந்த சிலைகளை வெட்டி, விக்கிரத் தோப்புகளையும் வார்ப்பு விக்கிரகங்களையும் வெட்டு விக்கிரகங்களையும் உடைத்து நொறுக்கி, அவைகளுக்குப் பலியிட்டவர்களுடைய பிரேதக்குழிகளின்மேல் தூவி, பூஜாசாரிகளின் எலும்புகளை அவர்களுடைய பீடங்களின்மேல் சுட்டெரித்து, இவ்விதமாய் யூதாவையும் எருசலேமையும் சுத்திகரித்தான். அப்படியே அவன் மனாசே எப்பிராயீம் சிமியோன் என்னும் பட்டணங்களிலும், நப்தலிமட்டும் பாழான அவைகளின் சுற்றுப்புறங்களிலும் செய்தான் (II நாளாகமம் 34:3-6).

18-ம் வயதிலே தேசத்தை சுத்திகரிக்கும் பணியை துவங்கிய யோசியா தனது 24-ம் வயதிலே முழுஇஸ்ரவேல் நாட்டையும் சுத்திகரிதார். என்ன ஆச்சரியம் பாருங்கள். 24- வயதே நிரம்பிய யோசியா என்ற வாலிபன் ஒரு தேசத்தையே சுத்திகரிக்க முடியுமென்றால், நம்மால் ஏன் முடியாது. யோசியாவிற்குள் இருந்த கர்தர்க்காக வாழவேண்டும் என்ற வைராகியமே அத்தகைய பெரிய காரியங்களை செய்யவைத்தது. ஆகவே இளைஞர்களே, இன்றைக்கு ஒரு பொருத்தனை செய்து கொள்ளுங்கள் வாலிபப்பிராயத்திலே சிருஷ்டிகரை நினைத்துக் கொள்ள வேண்டும் என்கிற பொருத்தனைதான் அது. கிருபையின் நாட்கள் முடிவதற்கு முன்பாக மனசாட்சியை கால்களின் கீழே தள்ளி அடிக்கடி மிதித்துப் போட்டதினால் அது செத்துப் போவதற்கு முன்னதாகவும், காலதாமதம் செய்வதினால் வயது சென்று இருதயம் கடினப்பட்டுப் போவதற்கு முன்பாகவும் உங்களுக்கு நேரமும், பெலனும், சந்தர்ப்பங்களும் இருக்கும்போதே கர்த்தருடனே நித்திய உடன்படிக்கை செய்து கொள்ளுங்கள். ஆவியானவர் என்றென்றைக்கும் உங்களுடனே போராடிக் கொண்டேயிருக்க மாட்டார். மனசாட்சியின் சத்தத்தை நீங்கள் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டேயிருந்தால், அந்த சத்தம் மங்கி, மறைந்து போய்விடும். அத்தேனே பட்டணத்தார் பவுலிடம், நீ சொல்லுகிறதை இன்னொரு வேளை கேட்போம் என்றார்கள்”(அப் 17:32). ஆனால், பவுல் பேசுவதைக் கேட்க இன்னொரு சந்தர்ப்பம் அவர்களுக்கு ஏற்படவேயில்லை. துரிதமாக செயல்படுங்கள். தாமதிக்காதிருங்கள். இனிமேலும் தயங்காதிருங்கள். கர்த்தர் துணை நிற்கிறார்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " அரசர். யோசியா – பாகம் 1 "

Post a Comment