விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

யெகோவா ஷாலோம் – நமது சமாதானத்தின் கர்த்தர்சமாதானத்தின் கர்த்தர் உங்களுக்கு எப்பொழுதும் சமாதானத்தைத் தருவாராக. அவர் எப்பொழுதும் எல்லா வழியிலும் சமாதானத்தைத் தரவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். 2 தெசலோனிக்கேயர் 3:16

கர்த்தர் நம்மோடு இல்லை; எனக்குப் பெலன் இல்லை; என் குடும்பமும் எளியது; குடும்பத்தில் நானும் சிறியவன் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, மீதியானியருக்கு பயந்து திராட்சை ஆலை நடுவில் போரடித்துக்கொண்டிருந்த கிதியோனிடம் கர்த்தர், எதிர்களிடமிருந்து இஸ்ரயேல் மக்களை விடுவிக்க நீதான் போகவேண்டும் என்றார். கிதியோனுக்கு இதை நம்புவது கடினமாக இருந்தது. அதற்காக ஒரு அடையாளத்தைக் கேட்டு, வீட்டிற்குள் ஓடிப் போய் இறைச்சியையும், அப்பத்தையும், குழம்பையும் எடுத்துக்கொண்டு வந்தான். கிதியோன் கேட்டுக்கொண்டபடியே கர்த்தருடைய தூதனானவரும் இருந்தார். கிதியோன் கொண்டுவந்த உணவை கற்பாறையின் மேல் வைத்தபோது, தூதனானவர் தமது கையிலிருந்த கோலினாலே தொட்டார். அக்கினி எழும்பி அதைப் பட்சித்தது. கர்த்தரின் தூதனும் கிதியோனுடைய கண்களுக்கு மறைந்துபோனார். கிதியோன் கண்டது கர்த்தரை அல்ல; கர்த்தருடைய தூதனை. ஆனாலும், இஸ்ரவேலுக்குள் இருந்த நம்பிக்கையின்படி (யாத்.33:20) மரணம் நேரிடுமோ என்று கிதியோன் பயந்தார். அப்பொழுது கர்த்தர்: ‘உனக்குச் சமாதானம், பயப்படாதே. நீ சாவதில்லை’ என்றார். கிதியோனின் உள்ளம் சமாதானத்தால் நிறைந்தது. தன்னை அழைத்து அனுப்புகிறவர் கர்த்தர்தான் என்பதை நிச்சயப் படுத்திக்கொண்டார். உடனே கிதியோன் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தையும் கட்டி, சமாதானத்தின் தேவன் என்று பெயரிட்டார். (நியாயா 6:23-24)

சரீரத்திற்கு உணவும் ஆத்துமாவுக்கு சமாதானமும் தேவை. அந்த நிரந்தரமான சமாதானத்தை மனிதனாலோ, பிற பொருட்களினாலோ கொடுக்க முடியாது. மெய் சமாதானத்தை தர கிறிஸ்துவினால் மட்டுமே முடியும். இயேசுவானவர் இப்பூமியிலே அவதரித்தபோது தேவதூதர்கள் ‘பூமியின் மேல் சமாதானம்’ (லூக்கா 2 : 11) என்று பாட்டுப்பாடி போற்றியதற்கு காரணம் இதுதான். இயேசு ஊழியம் செய்த நாட்களில் பிணியாளிகளை சொஸ்தமாக்கி, பாவம் மன்னிக்கப்பட்டவர்களாய் அவர்களை ‘சமாதானத்தோடே போ’ (லூக்கா 7 : 50) என்று கூறி அனுப்பியதன் காரணமும் அதுதான். அவர் உயிர்த்தெழுந்த பின்னும் உங்களுக்கு ‘சமாதானம் உண்டாவதாக’ என்று கூறி காட்சியளித்தார்.

நமது ஆண்டவரும் இரட்சகருமான கிறிஸ்து இயேசுவானவர் உயிர்தெழுந்து பிதாவிடம் சென்ற பொழுது ‘சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன். என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக’ (யோவான் 14 : 27) என்ற வாக்குத்தத்தத்தை கொடுத்தார். ‘உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை’ (யோசான் 14 : 27) என்றும் இயேசு கூறியுள்ளார். இதை வாசிக்கின்ற நீங்கள் கடவுளோடும், சமூகத்தோடும், உங்களுக்குள்ளும் சமாதானமின்றி, பலவிதமான சிந்தனைகளினாலே அலைக்கழிக்கப்பட்ட நிலையில் இருந்தால் யெகோவா ஷாலோம் சமாதானத்தின் கர்த்தர் தருகின்ற சமாதானத்தை அனுபவியுங்கள். சமாதானத்தின் கர்த்தர் உங்களுக்கு எப்பொழுதும் சமாதானத்தைத் தருவாராக. அவர் எப்பொழுதும் எல்லா வழியிலும் சமாதானத்தைத் தரவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென் விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " யெகோவா ஷாலோம் – நமது சமாதானத்தின் கர்த்தர் "

Post a Comment