விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்

தேவனிடம் செல்ல இயேசுவே வழி 

நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். யோவான் 14:6

ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பொழுது அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் வெடித்தது. உள்நாட்டுப் போரில் போர் வீரனாக பணி செய்தவனுடைய நிலம் போர்க்காரியங்களுக்காக பயன் படுத்தப்பட்டது. போர் நிறைவு பெற்ற பின்னர் அந்த நிலமானது அந்த போர் திரும்ப கொடுக்கப்படவில்லை. இதனால் பெரும்பாதிப்பிற்குள்ளான அந்த போர் வீரன் அரசு அலுவலகங்களுக்கு சென்று முறையிட்டான். அவனுக்கு ஏற்ப்பட்ட இழப்பைக் குறித்து எந்த அதிகாரியும் அக்கறை காட்டவில்லை. மிகவும் சோர்ந்து போன அவன், இறுதி முயற்சியாக வெள்ளை மாளிகை சென்று ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனை சந்திக்க முடிவு செய்தார். வெள்ளை மாளிகையின் காவலாளிகள் யாரும் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. பலமுறை முயன்றும் காவலாளிகள் அவரை உள்ளே விடவில்லை.

ஒருநாள் அந்த ராணுவவீரன் வெள்ளை மாளிகைக்கு சற்று தூரத்தில் மிகுந்த சோர்வோடு அடுத்து செய்வதறியாது திகைத்து வருத்தத்தோடு நின்று கொண்டிருந்தான். அப்பொழுது அந்த வழியே வந்த சிறுவன் அவனைக் கண்டு பரிவோடு விசாரித்தான். அப்பொழுது அவன் அந்த சிறுவனிடம் தனது நிலையை எடுத்து கூறினான். அச்சிறுவன், “உடனே என்கூட வாருங்கள், நான் உங்களை வெள்ளை மாளிகைக்கு அழைத்து செல்கிறேன்என்று சொல்லி அழைத்து சென்றான். என்ன ஆச்சரியம், இப்பொழுது காவலாளிகள் வழிவிட்டு நின்றார்கள். ஆச்சரியத்தில் சிறுவனோடு நடந்து சென்றார் ராணுவவீரன். சிறுவன் அவனை நேராக நூலகத்திற்கு அழைத்து சென்றான். அங்கிருந்த தனது தந்தை ஆபிரகாம் லிங்கனுக்கு போர் ராணுவவீரனை அறிமுகப்படுத்தினான் அந்த சிறுவன். அப்பொழுது தான் தன்னை அழைத்து சென்ற சிறுவன், ஜனாதிபதியின் மகன் டாட் லிங்கன் (Tad Lincoln) என்பதை உணர்ந்தான் ராணுவவீரன். ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனிடம் தனது பிரச்சனைகளை எடுத்து கூறிவே வெகு சீக்கிரத்தில் ஒரு அனுகூலமான தீர்வைப் பெற்றுக் கொண்டான். நன்றி நிறைந்த உள்ளத்தோடு டாட் லிங்கனுக்கு நன்றி கூறி விடைபெற்று சென்றான் அந்த ராணுவவீரன்.

பாவிகளாக நாம் தேவனை நெருங்க முடியாமல் இருந்தபொழுது இயேசு நமது பாவங்களுக்கான விலைக்கிரயத்தை செலுத்தி தேவனிடம் நம்மை அழைத்து செல்லும் வழியாய் மாறினார். ஆகவே தான் இயேசு கூறினார் நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்” (யோவான் 10:9) என்று தெளிவாக கூறினார். இயேசு சிலுவையில் தமது ஜீவனைவிட்டபோது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல் தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாக கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது” (மத்.2 : 51). திரைச்சீலையை கீழே இருந்து கிழிப்பது சுலபம். ஆனால் மேலே இருந்து கிழிப்பது சிரமம். வாசஸ்தலத்திற்குரிய திரைச்சீலை இளநீல நூலாலும் இரத்தாம்பர நூலாலும், சிவப்பு நூலாலும் திரித்த மெல்லிய பஞ்சு நூலாலும் உண்டுபண்ணிய மிகக் கனமுள்ள திரைச்சீலையாகும். ஆனாலும் அது மேலேயிருந்து கீழே இரண்டாகக் கிழிந்தது. பழைய ஏற்பாட்டின் பலிகள், கொள்கைகள் அனைத்தும் முடிவடைந்தன என்பதை வெளிப்படுத்தும்படியே தேவாலயத்தின் திரைச்சீலை இரண்டாக கிழிந்தது. கிறிஸ்துவின் சரீரம் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் மட்டும் கொடூர வேதனைகளால் கிழிக்கப்பட்டதால் நாம் தைரியமாக கிருபாசனத்தண்டைக்கு போகக்கூடியதாக இருக்கிறது.நாம் குமாரன் மூலமேயன்றி வேறெவ்விதத்திலும் எவரைக் கொண்டும் பிதாவின் சமுகத்தில் பிரவேசிக்க முடியாது. அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளேவேறேரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை” (அப்.4:12). புண்ணிய ஸ்தலங்களுக்குப் போவதிலும் பொருத்தனைகள் பல தெய்வங்களுக்கு செய்வதினாலும், தங்களைக் கீறிக்கொள்ளுவதினாலும் புனிதர்களை வழிபடுவதின் மூலம் நாம் தேவனின் சமுகத்திற்கு செல்லமுடியாது,நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவா. 14 : 6) என்ற இயேசு தாமே நாம் எந்த நிலையில் இருந்தாலும், எந்த வேளையிலாகிலும் தைரியமாக அவர் சமுகத்திற்குச் செல்லும் வாய்ப்பு திரைச்சீலை கிழிக்கப்பட்டதன் மூலம் நமக்கு கொடுக்கப்பட்ட சிலாக்கியமாகும்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

நன்றி
தேவனுடைய வார்த்தை

0 Response to " நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் "

Post a Comment