விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

மன்னியாதிருத்தல் விளைவிக்கும் பேரிழப்பு! (08 June 2014)"அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்." மத்தேயு:18:22.

கர்த்தராகிய இயேசு பேதுருவினிடத்தில் அவன் தன் சகோதரனை ஏழெழுபது தரம் மன்னிக்க வேண்டுமென்று சொல்லுகிறார். 'எழுபது' என்பது நம்முடைய ஜீவிய காலம் முழுவதையும் குறிக்கிறது. "எங்கள் ஆயுசு நாட்கள் எழுபது வருஷம்" சங்:90:10 என நாம் வாசிக்கிறோம். 'ஏழு' பூரணத்தைக் குறிக்கும் ஒரு இலக்கமாகும். ஆகவே 'ஏழெழுபது தரம் மன்னித்தல்' என்பது, நாம் நம்முடைய ஜீவிய காலம் முழுவதும் மற்றவர்களை பூரணமாக மன்னித்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்றே பொருள்படும்.

நமக்கு விரோதமாகத் தப்பிதம் செய்தவர்களை மன்னியாதிருக்கும் ஒரு ஆவியை நம்மில் பேணி வளர்ப்பதினால் நாம் செலுத்த வேண்டியதாயிருக்கும் கடும் கிரயத்தைப் பற்றிச் சற்றாகிலும் நாம் உணர்வுள்ளவர்களாயிருந்தால், நாம் ஒருக்காலும் அதற்கு இடமளிக்கவே மாட்டோம். அவசியமற்ற, சொல்லொண்ணாத் துன்பங்களை அது நமக்கும் மற்றவர்களுக்கும் வருவிக்கிறது. அது சம்மந்தமாகக் கர்த்தராகிய இயேசு மத்தேயு:18:21-35 - இல் உரைத்திருக்கும் உவமை, நம் மனக்கண்களைப் பிரகாசிப்பிப்பதாய் இருக்கிறது. மத்தேயு:18:21-35 - இல் குறிப்பிடப்பட்டுள்ள 'ராஜா' கிறிஸ்துவையும், 'ஊழியக்காரர்கள்' நம்மையும் குறிக்கின்றது. அந்த ராஜா 10,000 தாலந்துகள் கடன்பட்டிருந்தவனை மன்னித்து விட்டான். நம்மை மன்னிக்கும்படியாகக் கர்த்தராகிய இயேசு கல்வாரிச் சிலவையில் செலுத்திய கிரயம் இதைப் பார்க்கிலும் மிகவும் அதிகமானதாகும். ஆனால் நம்முடைய பாவக் கடனிலிருந்து நாம் விடுதலை பெற்றிருப்பினும், மற்றவர்களை மன்னித்து நேசிக்கும் கடனிலிருந்து நாம் விடுபடவில்லை - நாம் பிறரை மன்னித்து நேசிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.

"எவனுக்கு நீங்கள் மன்னிக்கிறீர்களோ, அவனுக்கு நானும் மன்னிக்கிறேன்; மேலும் எதை நான் மன்னித்திருக்கிறேனோ, அதை உங்கள்நிமித்தம் கிறிஸ்துவினுடைய சந்நிதானத்திலே மன்னித்திருக்கிறேன். சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படி செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே (IIகொரி. 2:10-11)." "சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு" என்பது 'சாத்தான் அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு நம்மை மேற்கொள்ளாதபடிக்கு' என்ற அர்த்தத்தில் கூறப்பட்டுள்ளது. அநேகரும் சாத்தானின் தந்திரங்களை அறியாதவர்களாயிருப்பதினாலேயே மற்றவர்களை மன்னிக்க மறுத்துவிடுகிறார்கள். 'பிசாசனவன் எப்போதும் என்னைப் பின்தொடருகிறான்' என்று சிலர் முறையிடுகிறார்கள். உங்கள் ஜீவியத்திலுள்ள பிறரை மன்னிக்க முடியாத ஆவியை அல்லது அறிக்கை செய்யப்படாத மறைவான பாவத்தைக் கண்டுபிடித்து விட்டுவிடுங்கள்; பிசாசனவன் உங்களைப் பின்தொடருவதை விட்டுவிடுவான்!! நாம் நம்முடைய ஜீவியத்தைத் தேவனோடு சரியான நிலையில் காத்துக்கொள்ளும்போது, யாதொரு பிசாசின் வல்லமைக்கும் நம் மேல் எவ்வித அதிகாரமுமிராது!!!

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

http://www.vvministry.com/sms_email.html -- தினமும் உங்கள் E mail முகவரிக்கு கர்த்தருடைய செய்தியையும் வேத வசனத்தை உங்கள் மொபைலுக்கு SMS மூலமாகவும் பெற விரும்பினால் கொடுக்கபட்ட LINK-ல் உள்ள படிவத்தை நிரப்பவும்.

0 Response to " மன்னியாதிருத்தல் விளைவிக்கும் பேரிழப்பு! (08 June 2014) "

Post a Comment