விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

நமக்காய் பரிந்து பேசுபவர் (04 June 2014)



'என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசு கிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராக இருக்கிறார்.' I யோவான்:2:1.

"அட்வகேட்" என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் பதத்தில் "அட்" "வகேட்" என்ற சொற்கள் "அழைக்கப்பட்ட ஒருவர்" என்னும் இலத்தீன் பதங்களின் தொகுப்பு ஆகும். நமது சார்பில் பரிந்து வாதாடுபவர் என்று இதற்குப் அர்த்தம். வேதம் நமக்காகப் பரிந்து பேசும் இருவர் உண்டு என்னும் சத்தியத்தை அழகாக விளக்குகிறது. இவ்வுலகில் பரிசுத்த ஆவியானவர் நமக்காகப் பரிந்து பேசுகிறார். நமக்கு சரியாகச் சொல்லத் தெரியாதவற்றை அவர் நமக்காகச் சொல்கிறார். நமக்குப் புரியாததை அவர் விளக்கித் தருகிறார். பரலோகத்திலே பிதாவிடம் இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார். நமது வழக்குகளை அவர் பேசுகிறார். ஆகவே தலைசிறந்த இரண்டு பரிந்து பேசுகிறவர்கள் நமக்கு உண்டு. பிதாவின் வலது பக்கத்தில் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் பூலோகத்தில் பரிசுத்த ஆவியானவரும் நமக்காகப் பரிந்து பேசுகின்றனர். இவ்விரு வழக்கறிஞர்களைக் கொண்ட நாம் எப்படி நமது வழக்கில் தோற்றுப் போவோம்.

“நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்” என்று யோவான்: 14:16-18ல் என்று பரிசுத்த ஆவியானவரைப் பற்றி இயேசு குறிப்பிடுகின்றார். “வேறொரு தேற்றரவாளன்” என்னும் வார்த்தையின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும். அது ஒரு ஆளைக் குறிக்கிறது. "நான் இங்கு இருந்த நாட்களில் நான் உங்கள் உதவியாளராக இருந்தேன். ஆனால் இப்பொழுது கடந்து போகிறேன். ஆனால் உதவியற்றவர்களாக நீங்கள் விடப்படுவதில்லை. வேறொரு உதவியாளர் உங்களுக்கு வருவார்" என்று அர்த்தம்.

"தேற்றரவாளன்" என்னும் குறிப்பிட்ட வார்த்தையின் கிரேக்கப்பதம் "பராகிளீட்டாஸ்" என்பதாகும். கத்தோலிக்க மொழிபெயர்ப்பு "பராக்கிளீட்" என்று கூறுகிறது. "நம்முடன் இருந்து உதவி செய்யும்படி அழைக்கப்பட்டவர்" என்பதே "பராக்கிளீட்" என்ற சொல்லின் அர்த்தமாகும். அவர் வரும்பொழுது நம்மை விட்டு நீங்கிப் போகமாட்டார். நிரந்தரமாய் நம்முடன் இருப்பார். இப்பொழுதும் இதை வாசிக்கின்ற நீங்கள் ஆதரவற்றவர்களாக விடப்பட்டுப் போனவர்களாக உணருகின்றீர்களா!! கவனிப்பாரற்று, உதவி செய்வாரற்று, வழிகாட்ட ஒருவரும் இல்லாத அனாதையாய் விடப்பட்டவராக உங்களை எண்ணிக் கொண்டு இருக்கிறீர்களோ!!! இப்பொழுதும் பரிசுத்த ஆவி என்னும் நிரந்தரமான உதவியாரை, தேற்றரவாளனை, ஆலோசகரை உங்களுக்குள் தங்கி ஆளுகைச் செய்ய முழுமையாய் அனுமதியுங்கள். பரிசுத்த ஆவியானவர் மூலம் உங்களது முழு தேவைகளும் சந்திக்கப்பட போவது உறுதி!!!

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

http://www.vvministry.com/sms_email.html -- தினமும் உங்கள் E mail முகவரிக்கு கர்த்தருடைய செய்தியையும் வேத வசனத்தை உங்கள் மொபைலுக்கு SMS மூலமாகவும் பெற விரும்பினால் கொடுக்கபட்ட LINK-ல் உள்ள படிவத்தை நிரப்பவும்.

0 Response to " நமக்காய் பரிந்து பேசுபவர் (04 June 2014) "

Post a Comment