Friday, 16 May 2014
உங்கள் சாந்தகுணம் (19 May 2014)
உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார். - (பிலிப்பியர் 4:5).
கடும் கோடை காலத்தில் கண் தேடிய இடமெங்கும் தண்ணீர் தேடி மான் ஒன்று தவித்தது. தண்ணீர் தேடி அங்குமிங்கும் அலைந்தது. களைப்போடு தண்ணீரைத் தேடிக் கொண்டிருந்த போது அதன் கண்களில் ஒரு நீரோடை தெரிந்தது. தொலைவில் தெரிந்த அந்த நீரோடையை நோக்கி மான் இன்னும் வேகமாய் ஆர்வமாய் ஓடியது. அருகில் சென்ற போது வெறும் மண்ணைக் கண்டு ஏமாற்றம் அடைந்தது. அந்தோ! அது கானல் நீர்! ஆம்; கொடுமையான காற்றில் ஏற்படும் வெப்பத்தின் மாறுபாட்டினால் இது உண்டாகிறது.
வேதத்திலும் இது போன்ற ஒரு சம்பவம் உள்ளது. இயேசுவானவர் ஊழியம் செய்ய சென்ற போது தூரத்திலே ஒரு அத்திமரத்தைக் கண்டு அதன் செழிப்பைப் பார்த்து, பசியோடு இருந்த படியால், அதன் கனிகளை எதிர்ப்பார்த்து ஆவலோடு அருகில் சென்றார். அந்தோ! அந்த மரத்தில் இலைகளைத் தவிர வேறொன்றும் காணாமல் ஏமாற்றமடைந்து, அம்மரத்தை சபித்தார். - (மத்தேயு 21:18-19)
நம்முடைய வாழ்க்கையும் அநேக நேரங்களில் வெறுமையான கானல் நீர் போன்று காணப்படுகிறது. சில நேரங்களில் நாம் வெளியில் பார்ப்பதற்கு செழிப்பாக தோற்றமளித்த அந்த அத்தி மரத்தைப் போல காணப்படுகிறோம். என்றோ ஒரு நாள் நம்முடன் பழகும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அண்டை வீட்டுக்காரர்களுக்கும் ஆலயத்திலுள்ள சக விசுவாசிகளுடைய பார்வையிலும் நாம் கனி நிறைந்தவர்களாகவும், தெளிந்த நீரோடை போலவும் காணப்படலாம். ஆனால் நம் அருகில் அவர்கள் பழக நேரிடும் போது தான் நம்முடைய உண்மையான, கனியற்ற தன்மைகள் வெளிப்படும்.
முக்கியமாக. நம் வீட்டில் எப்போதும் நம்முடனே இருக்கும் கணவன் மனைவி, பெற்றோர், மாமியார், மாமனார், பிள்ளைகளிடம் நாம் எப்படி நடந்துக் கொள்கிறோம்? அவர்கள் நம்மில் கனியைப் பார்க்கிறார்களா? நம்மிடம் தாழ்மையையும் பொறுமையையும் காண்கிறார்கள்? அன்பும் அமைதலும் நம்மிடம் உண்டா? நம் வீட்டிலுள்ளவர்கள் நம்மை குறித்து நற்சாட்சி கூற முடியுமா? ஒரு நிமிடம் யோசியுங்கள், ஆம் என்றால் உங்களது கிறிஸ்தவ பயணம் சரியாகத்தான் சென்றுக் கொண்டிருக்கிறது. இல்லையென்றால் நாம் வேஷமாகவே வாழ்கிறோம். கானல் நீரும், கனியற்ற அத்திமரமும் யாருக்கும் பயன்படாதது போல நமது வாழ்வும் பயனற்ற வாழ்வாகவே இருக்கும்.
பிரியமானவர்களே! தேவன் நமக்குள் மறைந்திருக்கும் இருதயத்தையே காண்கிறார். வெளித்தோற்றத்தையல்ல. ஆகவே நாம் வெளித்தோற்றத்தில் நற்சாட்சி பெற விரும்பாமல், மெய்யான குணங்களில் வளர பிரயாசப்படுவோம். ஆமென் அல்லேலூயா!
நன்றி
The Pentecost Voice
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக.
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
http://www.vvministry.com/sms_email.html --
தினமும் உங்கள் E mail முகவரிக்கு கர்த்தருடைய செய்தியையும் வேத வசனத்தை உங்கள் மொபைலுக்கு SMS மூலமாகவும் பெற விரும்பினால் கொடுக்கபட்ட LINK-ல் உள்ள படிவத்தை நிரப்பவும்.
0 Response to " உங்கள் சாந்தகுணம் (19 May 2014) "
Post a Comment